ஒரு மொழியை திணித்தால் எதையும் ஏற்க மாட்டோம் என்பது நம் மொழிக் கொள்கை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


டென்ஷனாக இருக்கும் நேரத்தில் தமிழ் இசை நிம்மதியை தருகிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

சென்னை பாரிமுனையில் தமிழ் இசை சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ் இசை 80-ம் ஆண்டு விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவின்போது, பாடகி செளமியாவுக்கு இசை பேரறிஞர் விருதும், சற்குருநாதன் ஓதுவாருக்கு பண் இசை பேரறிஞர் விருதும் வழங்கி கௌரவித்தார்.

பின்னர் சென்னையில் தமிழ் இசைச்சங்கம் 80-ம் ஆண்டு விழாவை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

முதல்-அமைச்சராக பொறுப்பேற்றது முதல் கொரோனா, மழை, என எவ்ளோ பிரச்சினைகள், எவ்வளவு டென்ஷன், இத்தகைய பணிகளுக்கு இடையே இந்த தமிழ் இசை நிகழ்ச்சிகள் மூலம் மன அமைதி, மன நிம்மதியை பெறுகிறேன். தமிழ் இசை தமிழ்நாட்டில் கொடி கட்டி பறக்க காரணம் இந்த தமிழ் இசை மன்றம் தான்.

தனித்தமிழ் இயக்கம், தமிழ் இசை இயக்கங்களை திராவிட இயக்கம் ஆதரித்து போற்றியது.

தமிழகத்தில் தமிழ் மேடைகளில் தமிழில் பாட வேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டிய நிலை இருந்தது. அதை மாற்றியது திராவிட இயக்கம் தான். தமிழ் இசைக்காக தன்னை ஒப்படைத்துக்கொண்டவர் அரசர் அண்ணாமலை. ஒரு மொழியை திணித்தால் எதையும் ஏற்க மாட்டோம் என்பது நம் மொழிக் கொள்கை.

தமிழ் நீஷ பாஷை என்று சொன்ன காலம் உண்டு. தமிழ் நீஷ பாஷை, ஆனால் அவர்களிடம் இருந்து பெறும் காசு, நீஷ காசு இல்லையா? என கேட்டவர் தந்தை பெரியார். தமிழ் மொழியை காக்க மறைமலை அடிகள் தலைமையில் தனி தமிழ் இயக்கம் எழுந்தது, தமிழ் கலையை காக்க இந்த தமிழ் இசை சங்கம் எழுந்தது

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ஆள வேண்டும், மொழி தான் இரு இனத்தின் ரத்த ஓட்டம், மொழி அழிந்தால் இனம் அழியும், பிற மொழி ஆதிக்கத்தை எதிர்ப்பதில் உறுதியாக உள்ளோம்.

ஒருவர் விரும்பினால் எத்தனை மொழி வேண்டுமானாலும் படித்துகொள்ளலாம். திணித்தால் எதையும் ஏற்க மாட்டோம். என்பதே நம்முடைய மொழிக்கொள்கை.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story