அரசின் பழிவாங்கும் படலத்தை கண்டு பயப்பட மாட்டோம் -சி.வி.சண்முகம் பேட்டி


அரசின் பழிவாங்கும் படலத்தை கண்டு பயப்பட மாட்டோம் -சி.வி.சண்முகம் பேட்டி
x

தி.மு.க. அரசின் பழிவாங்கும் படலத்தை கண்டு பயப்பட மாட்டோம் என சி.வி.சண்முகம் எம்.பி. தெரிவித்தார்.

சென்னை,

லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்த சென்னை அடையாறில் உள்ள சி.விஜயபாஸ்கர் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. நேற்று சென்றார். ஆனால் அங்கிருந்த போலீசார் அவரை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. தான் வக்கீல் என்றும், அதனால் தன்னை அனுமதிக்க வேண்டும் என்றும் போலீசாரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனாலும் போலீசார் அனுமதிக்காததால் சி.வி.சண்முகம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

பழிவாங்கும் படலம்

மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரான பிறகு அ.தி.மு.க. தலைவர்களை பழிவாங்கும் எண்ணத்திலேயே செயல்பட்டு வருகிறார். கருணாநிதி போலவே இவரும் இதுபோன்ற பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். சோதனை என்ற பெயரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை வைத்து இந்த பழிவாங்கும் படலத்தை தி.மு.க. அரசு மேற்கொண்டிருக்கிறது. ஆனால் இத்தகைய சோதனைகளுக்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு விலைவாசி உயர்ந்திருக்கிறது. மின் கட்டணம் எகிறி இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

அதேவேளை அ.தி.மு.க. அரசு கொண்டுவந்த மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். உரிய பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அனுமதி

நீண்ட வாக்குவாதத்துக்கு பிறகு விஜயபாஸ்கர் இல்லத்துக்கு உள்ளே செல்ல சி.வி.சண்முகத்துக்கு அனுமதி கிடைத்தது.

அதனைத்தொடர்ந்து அவர் உள்ளே சென்றார்.


Next Story