காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டவிடமாட்டோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
மேகதாது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிப்பது தவறானது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுள் ஒன்று காவிரிப் பிரச்சினை. தமிழ்நாட்டுக்கான முழு உரிமை உள்ளதும் காவிரி நீர் ஆகும். எனவே, காவிரி நீர் உரிமையைப் பெறுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு எந்த அளவுக்கும் சென்று போராடும்; வாதாடும்; தனது உரிமையை நிலைநாட்டும் என்பதை முதலில் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தகைய சூழலில் காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுக்கவும், நீர்வரத்தைக் குறைக்கவும் கர்நாடக மாநில அரசு தொடர்ந்து பல்வேறு செயல்களைச் செய்து வருகிறது. அதில் மிகமுக்கியமானது, மேகதாது அணை கட்டும் திட்டம்!
மேகதாது அணையைக் கர்நாடக அரசு கட்டுவது என்பது, தமிழகத்தின் காவிரி உரிமையைத் தடுப்பதும், தமிழகத்துக்கு வரும் நீர்வரத்தைக் குறைப்பதன் மூலமாகத் தமிழக உழவர்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமும்; கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதும் ஆகும்.சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்புகளுக்கும், காவிரி தொடர்பான அனைத்து சட்டம், விதிகளுக்கும் மாறானதாகும்.
எனவே, மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடி வருகிறது. இந்தியப் பிரதமர் அவர்களை நேரில் சந்தித்தபோதும் இதுதொடர்பாக வலியுறுத்தி வந்துள்ளேன். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் அழைத்துச் சென்று மத்திய அரசிடம் இதுதொடர்பாக வலியுறுத்தி வருகிறோம். மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என்பதும், காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விவாதிக்கக் கூடாது என்பதும்தான் தமிழக அரசின் உறுதியான - இறுதியான நிலைப்பாடு!
மேகதாது அணை கட்டக் கூடாது என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கர்நாடக மாநில அரசு தனது பிடிவாதமான செயல்களிலிருந்து பின்வாங்காமல் நடந்து வருகிறது.
இந்நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், கர்நாடக அரசின் மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்ற செய்தி வெளியானதும், கடந்த 13-ஆம் நாளன்று பிரதமருக்கு ஒரு அவசரக் கடிதம் அனுப்பி இருக்கிறேன்
நீண்டகால சட்டப்போராட்டத்திற்குப் பின்னரே கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காவிரி நதிநீர்ப் பகிர்வுக் குறித்த தனது தீர்ப்பை சுப்ரீம்கோர்ட் வெளியிட்டது என்றும், அந்தத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் தண்ணீர் தங்கள் எதிர்பார்ப்பிற்கும் தேவைக்கும் போதுமானதாக இல்லை என்ற சூழலில், கிடைக்கும் தண்ணீருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கர்நாடக அரசின் நடவடிக்கை தமிழ்நாட்டைப் பொருத்தவரை மிக முக்கியமான பிரச்சனை என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தேன்.
மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து தமிழ்நாடு அரசு ஏற்கனவே தொடர்ந்த 3 வழக்குகள் சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 7-ஆம் தேதி மேலும் ஒரு புதிய மனு சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்நாடு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அதிகார வரம்பு குறித்த முக்கியமான கேள்விகள் இந்த வழக்குகளில் கேட்கப்பட்டிருப்பதாகவும் அதில் நான் குறிப்பிட்டு இருந்தேன்.
எனவே, மேகதாது திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கக் கூடாது என காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு மத்திய ஜல்சக்தி துறைக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவுறுத்த வேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தி இருந்தேன்.
கர்நாடக முதல்-மந்திரி அவர்கள் மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கைக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து இருந்தார்.
"சுப்ரீம்கோர்ட்டில் இப்பிரச்சினைக் குறித்த வழக்குகள் நிலுவையிலுள்ள போது, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சிகள் மேற்கொள்வது சட்டத்திற்குப் புறம்பானதாகும். ஆகையால், சுப்ரீம்கோர்ட் இப்பிரச்சனைக்குத் தீர்வு அளிக்கும்வரை மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்" என கர்நாடக முதல்-மந்திரிக்கு அறிவுறுத்தி இருந்தார் அமைச்சர் துரைமுருகன்.
இந்த நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டும் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தஞ்சாவூரில் பேட்டி அளித்து இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இப்படி தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறதா? சுப்ரீம்கோர்ட்டில் ஒரு விவகாரம் வழக்காக இருக்கும்போது அதனை விவாதிக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு இல்லை. அது தெரிந்தும், விவாதிப்போம் என்று ஆணையத்தின் தலைவர் சொல்வது சட்டவிரோதமானதாகும்.
இதுதொடர்பாக தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை மத்திய அரசுக்கு உணர்த்துவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் குழு டெல்லி செல்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இக்குழு டெல்லி சென்று மத்திய அமைச்சரைச் சந்திப்பதற்கான நேரம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இக்குழு டெல்லி செல்லும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டெல்லி சென்றுள்ள கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அவர்கள், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வந்துள்ளதாகச் சொல்லி இருக்கிறார்கள். கர்நாடக அரசின் அழுத்தத்துக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு பணியக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். கூட்டாட்சியின் மாண்பைக் காக்கும் வகையில் பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் அமையும் என எதிர்பார்க்கிறேன்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம். அது தொடர்பாகக் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் விவாதிப்பதும் தவறானதாகும். தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டம் சுப்ரீம்கோர்ட்டில் தொடரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். காவிரியின் உரிமையைக் காக்கத் தமிழக அரசு தொடர்ந்து போராடும்.
இவ்வாறு அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.