மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்
மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்
மேகதாதுவில் அணை கட்டவிட மாட்டோம் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
ஆலோசனை கூட்டம்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தாட்கோ தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள், தூர்வாரும் பணிகள், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
நலத்திட்ட உதவிகள்
முன்னதாக நடந்த விழாவில் பல்வேறு துறைகளின் கீழ் 97 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 71 லட்சத்து 94 ஆயிரத்து 307 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாகை மாவட்டத்தில் பொறுப்பு அமைச்சராக அறிவித்த பிறகு வளர்ச்சிப்பணிகள் குறித்து அரசுத்துறை அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருடன் விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த ஆட்சியில் பெயரளவிற்கு தான் தூர்வாரப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் உரிய நிதி ஒதுக்கீடு செய்து முறையாக தூர்வாரப்பட்டுள்ளது.
மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்
நாகை மாவட்டத்தை பொறுத்தவரை வருகிற 10-ந் தேதிக்குள் தூர்வாரும் பணிகள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம்.
அனைத்து பணிகளும் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள் தயாராக உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம். இதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது எம்.எல்.ஏ.க்கள் நாகை மாலி, முகமது ஷாநவாஸ், மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உள்பட பலர் உடன் இருந்தனர்.