பிரதமரின் தமிழக வருகையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுவோம்
காவிரி டெல்டா மாவட்டத்தில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட மறுத்தால் பிரதமரின் தமிழக வருகையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
மன்னார்குடி:
காவிரி டெல்டா மாவட்டத்தில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட மறுத்தால் பிரதமரின் தமிழக வருகையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
நிலக்கரி எடுக்கும் திட்டம்
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தஞ்சாவூர் மாவட்டம் வடசேரியில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை மேற்கொள்வதற்கான முதல் கட்ட ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. இதனை அறிந்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
சட்டவிரோதமாக நிலக்கரி திட்ட அறிவிப்பானை நகலை தீயிட்டு கொளுத்தினோம். மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளோடு இணைந்து போராட்ட களத்தில் ஈடுபட்டோம். எங்கள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் உடனடியாக பிரதமருக்கு கடிதம் மூலம் திட்டத்தை கைவிட வலியுறுத்தினார். தொடர்ந்து இன்று சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் இத்திட்டத்திற்கு எதிராக வலியுறுத்தியதின் அடிப்படையில் ஒத்த கருத்தோடு திட்டத்திற்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளதை காவிரி டெல்டா விவசாயிகள் சார்பில் வரவேற்கிறோம்.
போராட்டத்தில் ஈடுபடுவோம்
முதல்-அமைச்சர், எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒத்தக்கருத்தோடு குரல் கொடுத்தது விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது. அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். பா.ஜ.க. தமிழக தலைமையும், மத்திய நிலக்கரி துறை அமைச்சரை நேரில் சந்தித்து கைவிட வலியுறுத்தியதையும் குறிப்பிட விரும்புகிறோம்.
அனைத்து கட்சிகள் மற்றும் சட்டமன்ற தீர்மானத்தின் அடிப்படையில் முதல்-அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று பாரதப்பிரதமர் நேரில் தலையிட்டு உடனடியாக காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அறிவிக்கப்பட்டு, டெண்டர் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலக்கரி திட்டத்தை நிரந்தரமாக கைவிட அறிவிப்பு வெளியிட வேண்டும் வலியுறுத்துகிறோம். மறுக்கும் பட்சத்தில் பிரதமரின் தமிழக வருகைக்கு எதிராக விவசாயிகள் தீவிரமான போராட்டத்தில் களமிறங்க நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.