காவிரி நீர் கிடைக்க கர்நாடக அரசுக்குஅழுத்தம் கொடுப்போம்அமைச்சர் ரகுபதி பேட்டி
காவிரி நீர் கிடைக்க கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என அமைச்சர் ரகுபதி கூறினார்.
விலையில்லா சைக்கிள்
நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ., மீன்வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன், தாட்கோ தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'ஆகஸ்டு மாதத்துக்குள் மாணவர்கள் அனைவருக்கும் சைக்கிள் வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் நலத்திட்டங்களால் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத முன்னேற்றத்தை தமிழகத்தில் பெண்கள் அடைந்துள்ளனர்' என்றார்.
விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி ஷகிலா, கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங், உதவி கலெக்டர் பானோத்ம்ருகேந்தர்லால், நகரசபை தலைவர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக முதன்மை கல்வி அதிகாரி சுபாஷினி வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேசன் நன்றி கூறினார்.
அடிமை சாசனம்
நிகழ்ச்சி முடிவில் அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தற்போது உள்ள மத்திய அரசு எடுத்து வரும் முடிவுகள் அனைத்தும் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மாற்றி அமைக்கப்படும். பா.ஜனதா கட்சிக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்த கட்சி அ.தி.மு.க. பா.ஜனதா எது சொன்னாலும் அ.தி. மு.க.வினர் கை தூக்குவார்கள். அதுபோல தான் டெல்லி அரசுக்கு எதிரான மத்திய அரசின் மசோதாவிற்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது.
உரிய நிவாரணம்
மேட்டூர் அணையில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. கடைமடை மாவட்டத்தில் கருகும் பயிர்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அப்படி ஒருவேளை பயிர்களை காப்பாற்ற முடியவில்லை என்றால் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் மூலம் கருத்து கேட்கப்பட்டு பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார். குறுவை பயிர்களுக்கு காப்பீடு வழங்குவது குறித்து முதல்-அமைச்சர், வேளாண்துறை அமைச்சரிடம் பேசி உரிய முடிவெடுப்பார்.
கர்நாடக அரசுக்கு அழுத்தம்
காவிரி விவகாரத்தில் முந்தைய அ.தி.மு.க. அரசு நடந்து கொண்டது போல் இல்லாமல் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வகுப்பறைகள் திறப்பு
நாகூரை அடுத்த முட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.7 லட்சத்தில் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 3 வகுப்பறைகளை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். அப்போது மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், முகமதுஷாநவாஸ் எம்.எல்.ஏ., மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகரசபை தலைவர் மாரிமுத்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுபாஷினி, தர்கா தலைமை அறங்காவலர் காஜி ஹுசைன் சாஹிப், தர்கா ஆலோசனைக்குழு தலைவர் முகமது கலிபா சாஹிப், சித்தீக், ரமேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.