உற்பத்திக்கு நூல் வழங்காததை கண்டித்து நெசவாளர்கள் போராட்டம்


உற்பத்திக்கு நூல் வழங்காததை கண்டித்து நெசவாளர்கள் போராட்டம்
x

ராஜபாளையம் அருகே உற்பத்திக்கு நூல் வழங்காததை கண்டித்து நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உற்பத்திக்கு நூல் வழங்காததை கண்டித்து நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெசவாளர்கள்

ராஜபாளையம் அருகே உள்ள புனல்வேலி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காடா மற்றும் தமிழக அரசின் இலவச சேலை உற்பத்திக்கான நூல் 6 மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும்.

முன்னதாக ஒரு பாவு மூலம் 96 சேலைகள் வரை உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 24 சேலைகள் குறைக்கப்பட்டு தற்போது 72 சேலைகள் மட்டுமே உற்பத்தி நடக்கிறது. இந்த நிலையில் காடா ரகத்தில் உற்பத்திக்கான மீட்டர் மேலும் குறைக்கப்பட்டுள்ளது. சேலையை விட காடா ரகத்திற்கான உற்பத்தி கூலியும் 30 சதவீதம் வரை நெசவாளர்களுக்கு குறைவாகவே கிடைத்து வந்தது.

போராட்டம்

இந்தநிலையில் கடந்த 3 மாதங்களாக இலவச சேலை ரகத்திற்கான பாவு நூல் கூட்டுறவு சங்கத்தில் இருந்து வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து சங்க தலைவரிடம் நெசவாளர்கள் கேட்ட போது முறையான தகவல் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே கூட்டுறவு சங்க நிர்வாகத்தை கண்டித்தும், தடையின்றி வருடம் முழுவதும் பாவு நூல் வழங்க வேண்டும் என நெசவாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாங்குடி சாலையில் உள்ள கூட்டுறவு நெசவாளர் உற்பத்தி மற்றும் விற்பனை சங்க அலுவலகம் முன்பாக நடந்த இந்த போராட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

பாவு நூல் வழங்க வேண்டும். நூல் வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தடையின்றி ஊடை நூல் மற்றும் பாவு நூல் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.2 ஆயிரமாக உயர்த்த வேண்டும். 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள மருத்துவ காப்பீடு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய்புரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் உற்பத்திக்கு தேவையான நூல் வழங்கப்படும் என்ற அதிகாரிகளின் உறுதியை ஏற்று கொண்ட நெசவாளர்கள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.


Next Story