9-வது நாளாக நெசவாளர்கள் வேலை நிறுத்தம்
ஆண்டிப்பட்டி அருகே 9-வது நாளாக நெசவாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 3-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
கூலி உயர்வு ஒப்பந்தம்
ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த பகுதிகளில், சுமார் 2,500-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன.
பல்வேறு ரகங்களில் காட்டன் சேலைகளும், வெள்ளை, கலர் வேட்டிகளும் மற்றும் கோவில் சீசன்களுக்கு கருப்பு, காவி வேட்டிகளும் உற்பத்தி செய்து வருகின்றனர். சக்கம்பட்டி பகுதியில் 40-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களும், டி.சுப்புலாபுரம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களும் செயல்படுகின்றன.
இவர்களுக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல், 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது.
பேச்சுவார்த்தை தோல்வி
இந்தநிலையில், இந்த ஆண்டுக்கான புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் செய்யப்படாததால், கடந்த 2-ந்தேதி முதல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து கடந்த 4-ந்தேதி ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதேபோல் கடந்த 6-ந்தேதி மாலை தாலுகா அலுவலகத்தில் நடந்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தையும், நேற்று முன்தினம் திண்டுக்கல் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியையே சொந்தமாக்கின.
9-வது நாளாக வேலைநிறுத்தம்
இந்த நிலையில், 9-வது நாளாக டி.சுப்புலாபுரம் விசைத்தறி தொழிலாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விசைத்தறி தொழிலாளர்கள் மட்டுமின்றி, அதனை சார்ந்த பாகு தயாரிப்பது, நூல் கண்டு தயாரிப்பது உள்ளிட்ட பணியை மேற்கொள்வோர் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.