பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புளுதியூர் சந்தையில் ரூ.2 கோடிக்கு கால்நடைகள் விற்பனை-பொம்மிடி சந்தையும் களைகட்டியது


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புளுதியூர் சந்தையில் ரூ.2 கோடிக்கு கால்நடைகள் விற்பனை-பொம்மிடி சந்தையும் களைகட்டியது
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புளுதியூர் சந்தையில் ரூ.2 கோடிக்கு கால்நடைகள் விற்பனையாகின. இதேபோல் பொம்மிடி சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது.

புளுதியூர் சந்தை

அரூர் அருகே உள்ள கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் கால்நடை சந்தை கூடுவது வழக்கம். பிரசித்தி பெற்ற இந்த சந்தைக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்குவதற்காக வந்து, செல்வார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கூடிய சந்தையில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டன. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் குல தெய்வத்துக்கு பலியிட்டு வழிபடவும், காணும் பொங்கல் அன்று இறைச்சி தேவைக்காகவும் வெள்ளாடு, செம்மறி ஆடுகள் விற்பனை களை கட்டியது.

2 கோடிக்கு விற்பனை

இதேபோல் கறவை மாடு, எருமை மற்றும் இறைச்சிக்கான மாடுகள் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. மாடு ஒன்று ரூ.8 ஆயிரத்து 500 முதல் ரூ.58 ஆயிரத்து 300 வரையும், ஆடு ஒன்று ரூ.6 ஆயிரத்து 400 முதல் ரூ.16 ஆயிரம் வரை விற்பனையானது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தம் ரூ.2 கோடிக்கு கால்நடைகள் விற்பனையாகின. இதேபோல் கால்நடைகளுக்கான கயிறுகள், மூக்கணாங்கயிறு, மணி மற்றும் வண்ண பொடிகள் விற்பனையும் மும்முரமாக நடந்தது.

மலை ஆடுகள்

பொம்மிடி வடசந்தையூரில் நேற்று கால்நடை வாரச்சந்தை கூடியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த சந்தைக்கு சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள முளுவி, பூமரத்தூர், கோவிலூர், எஸ்.பாளையம், மோரூர் கோவிந்தாபுரம், ஜாலிகொட்டாய் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் அச்சம்பட்டி, கோம்பை, தண்டா, வே.முத்தம்பட்டி, கொண்டகரஅள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து அதிகளவிலான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

அவற்றை வாங்க தர்மபுரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் குவிந்தனர். இதனால் பொம்மிடி வாரச்சந்தை களை கட்டியது. ஆடு ஒன்று எடைக்கு தகுந்தவாறு ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் வரை விலைபோனது. இதனால் ரூ.1 கோடி வரை வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story