ஆறு, வாய்க்கால்களில் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்
திருத்துறைப்பூண்டி பகுதியில் ஆறு, வாய்க்கால்களில் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி பகுதியில் ஆறு, வாய்க்கால்களில் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றியக்குழு கூட்டம்
திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஒன்றிய ஆணையர்கள் அன்பழகன், வாசுதேவன், உதவி பொறியாளர்கள் சூரியமூர்த்தி, சாந்தி, மாவட்ட கவுன்சிலர் சுஜாதா, மேலாளார் மோகன் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்களது பகுதிக்கு தேவையான பாலம், படித்துறை, சாலை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஊதியம்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு ஊதியம் அறிவித்தது போல் ஒன்றியக்குழு தலைவர், துணை தலைவர், கவுன்சிலர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். மேட்டூர் நீரை நம்பி அதிக அளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
ஆனால் போதிய தண்ணீர் திறக்காததாலும், பருவமழை பெய்யாததாலும் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
நஷ்டம்
கடந்த ஆண்டு அறிமுகம் செய்த திருப்பதி- 5 விதை நெல் கடந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைத்ததால் இந்த ஆண்டு அதிக அளவில் அந்த விதை நெல் வாங்கி விவசாயிகள் சாகுபடி செய்தனர். ஆனால் முளைப்பு திறன் இல்லாததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுெதாடர்பான வேளாண்மைதுறை ஆய்வு செய்து முழு மானியத்தில் விதை நெல் வழங்கி இழப்பீட்டு தொகையும் வழங்க வேண்டும். விவசாயத்திற்கு பெரும் இடையூறாக ஆறுகள், பாசன, வடிகால் வாய்க்காலில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.