வாரச்சந்தை வியாபாரிகள் கலெக்டரிடம் மனு


வாரச்சந்தை வியாபாரிகள் கலெக்டரிடம் மனு
x

ராமநாதபுரம் மாவட்ட வாரச்சந்தை வியாபாரிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட வாரச்சந்தை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ராமு, செயலாளர் அண்ணாத்துரை, பொருளாளர் ஈஸ்வரன், முறைசாரா தொழிலாளர் சங்க சி.ஐ.டி.யூ. செயலாளர் முத்துவிஜயன் உள்பட ஏராளமான வாரச்சந்தை வியாபாரிகள் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். இவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாரச்சந்தை வியாபாரிகளாக சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான மளிகை, பழங்கள், காய்கறிகள், பூ உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். சந்தை வியாபாரத்தை மட்டுமே நம்பி வாழ்வாதாரம் கொண்டு பிழைத்து வருகிறோம்.

இந்நிலையில் கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி, அபிராமம் பேரூராட்சிகளில் சந்தை தரைக்கடை வாடகை வசூல் செய்ய குத்தகைதாரர்களை நிர்வாகம் நியமித்துள்ளது. இந்த குத்தகைதாரர்கள் வாரச்சந்தை வியாபாரிகளை கொத்தடிமைகளை போல நடத்தி அடாவடி வசூல் செய்து வருகின்றனர். சாலையோர வியாபாரிகளுக்கான சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி சாதாரண பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கீரை விற்பனை செய்யும் பெண்களிடம் ரூ.500 வசூல் செய்து அடாவடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக புகார் செய்து பல கட்டங்களாக அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி எழுத்து பூர்வமாக எழுதி வாங்கிய பின்னரும் தொடர்ந்து வருகிறது. கூலிப்படையினரை வைத்து மிரட்டி வருகின்றனர். இதற்கு நிர்வாக அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். எனவே, வாரச்சந்தை வியாபாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பும் தொழில் பாதுகாப்பும் வழங்கி வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.


Related Tags :
Next Story