ராமேசுவரத்தில் இருந்து ஹூப்ளிக்கு வாராந்திர சிறப்பு கட்டண ரெயில்- மார்ச் மாதம் வரை நீட்டிப்பு
ராமேசுவரத்தில் இருந்து ஹூப்ளிக்கு வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட ராமேசுவரத்தில் இருந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. ஹூப்ளியில் இருந்து ராமேசுவரத்துக்கு இந்த சிறப்பு கட்டண ரெயில் கடந்த ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி முதல் வருகிற 7-ந் தேதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மறுமார்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து ஹூப்ளிக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி முதல் அடுத்த மாதம் 8-ந் தேதி வரை இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரெயிலின் சேவை வருகிற மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹூப்ளி-ராமேசுவரம் வாராந்திர ரெயில் (வ.எண்.07355) ஹூப்ளியில் இருந்து வருகிற மார்ச் 25-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.10 மணிக்கு காரைக்குடி ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 6.15 மணிக்கு ராமேசுவரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், ராமேசுவரம்-ஹூப்ளி வாராந்திர ரெயில் (வ.எண்.07356) ராமேசுவரத்தில் இருந்து வருகிற மார்ச் 26-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.03 மணிக்கு காரைக்குடி ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் இரவு 7.25 மணிக்கு ஹூப்ளி ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில்களில் ஒரு 2 அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 3 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். ரெயில்கள் ஹவேரி, ராணி பென்னுரு, ஹரிஹார், தேவனஹரி, சிக் ஜாஜுர், பிரூர் அரிசிகரே, தும்கூர், யஷ்வந்த்பூர் (பெங்களூரு), பனஸ்வாடி, ஓசூர், தர்மபுரி, ஓமலூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ெரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதற்கிடையே, இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும் மானாமதுரையில் இருந்து ராமேசுவரம் வரை உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. தற்போது கால நீட்டிப்பு செய்யப்பட்டும், இந்த ரெயில் ராமேசுவரம்-மானாமதுரை இடையே ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் மட்டும் நின்று செல்கிறது என பயணிகள் தரப்பில் கவலை தெரிவித்துள்ளனர்.