ரெயில்வே சுரங்கப்பாதை கட்டும் பணிக்காக 80 டன் எடையுள்ள ராட்சத கர்டர் பொருத்தும் பணி
திண்டுக்கல்லில் ரெயில்வே சுரங்கப்பாதை கட்டும் பணிக்காக 80 டன் எடையுள்ள ராட்சத கர்டர், தண்டவாளம் பொருத்தப்பட்டது.
திண்டுக்கல்லில் ரெயில்வே சுரங்கப்பாதை கட்டும் பணிக்காக 80 டன் எடையுள்ள ராட்சத கர்டர்-தண்டவாளம் பொருத்தப்பட்டது.
ரெயில்வே சுரங்கப்பாதை
திண்டுக்கல்-கரூர் சாலையின் குறுக்கே எம்.வி.எம். நகர் அருகே பழனிக்கு செல்லும் ரெயில் தண்டவாளம் உள்ளது. இதனால் அங்கு ரெயில்வே கேட் இருந்தது. ரெயில்கள் செல்லும் போது கேட் மூடப்பட்டதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக கரூர், குஜிலியம்பாறை பகுதிகளுக்கு செல்லும் மில் தொழிலாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் சிரமப்பட்டனர்.
இதை தவிர்க்கும் வகையில் ரூ.17 கோடியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதில் தண்டவாளத்தின் இருபக்கங்களிலும் கட்டுமான பணிகள் நிறைவுபெற்றுவிட்டன. ஆனால் தண்டவாளத்தின் கீழ் பகுதியில் பணிகள் நடைபெறாமல் இருக்கிறது. இதனால் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
கரூர், குஜிலியம்பாறைக்கு செல்லும் பஸ்கள் சீலப்பாடி வழியாக சுமார் 3 கி.மீ. தூரம் சுற்றி செல்கிறது. மேலும் எம்.வி.எம்.நகர். உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் கூட்டுறவுநகர் வழியாக செல்கின்றனர். இதனால் சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
80 டன் எடை கர்டர்
இந்தநிலையில் ரெயில்வே நிர்வாகம் சார்பில் தண்டவாளத்தின் கீழ் பகுதியில் சுரங்கப்பாதைக்கான கட்டுமான பணிகள் நடைபெற இருக்கின்றன. இதற்காக அங்கு இருந்த தண்டவாளத்தை அகற்றிவிட்டு இரும்பு கர்டரில் தண்டவாளத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 27 மீட்டர் நீளத்துக்கு தண்டவாளம் துண்டித்து எடுக்கப்பட்டது.
இதையடுத்து 27 மீட்டர் நீளமும், 80 டன் எடையும் கொண்ட ராட்சத கர்டர் மற்றும் தண்டவாளம் பொருத்தும் பணி இன்று நடைபெற்றது. இதற்காக 2 ராட்சத கிரேன்கள், 3 பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு ராட்சத கர்டர் மற்றும் தண்டவாளம் பொருத்தப்பட்டது. இதையடுத்து ஒருசில நாட்களில் தண்டவாளத்தின் கீழ் பகுதியில் சுரங்கப்பாதை கட்டும் பணி தொடங்கும் என்று ரெயில்வே அதிகாரிகள் கூறினர்.