எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

தர்மபுரிக்கு நாளை மறுநாள் வரும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தர்மபுரி நகர மற்றும் ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்று பேசினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தர்மபுரி வருகிறார். மாவட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் அவர் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு முதல் முறையாக தர்மபுரிக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் நகர அவைத்தலைவர் அம்மா வடிவேல், நகர பொருளாளர் பார்த்திபன், நகர இணை செயலாளர் தனலட்சுமி சுரேஷ், நகர துணைச் செயலாளர்கள் அறிவாளி, மலர்விழி சுரேஷ், மாவட்ட பிரதிநிதி முருகன், நகராட்சி கவுன்சிலர்கள் தண்டபாணி, சக்திவேல், மாதையன், முன்னா, நாகேந்திரன், செந்தில்வேலன், நாகராஜன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய குழு தலைவர் நீலாபுரம் செல்வம் நன்றி கூறினார்.






