விழிப்புணர்வு ரத யாத்திரைக்கு ஓசூரில் வரவேற்பு
அகில பாரத துறவிகள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு ரத யாத்திரைக்கு ஓசூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஓசூர்:
அகில பாரத துறவிகள் சங்கம் சார்பில், நதி நீர் பாதுகாப்பு மற்றும் தூய்மை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ரத யாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சங்கத்தின் இணை செயலாளரும், ரதயாத்திரை ஒருங்கிணைப்பாளருமான சிவராமானந்தா சுவாமிகள் தலைமையில் இந்த ரத யாத்திரையானது கடந்த 20-ந் தேதி கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் தலைக்காவிரியில் தொடங்கியது. அங்கிருந்து பல்வேறு இடங்களை கடந்து ஓசூர் வந்த ரதயாத்திரைக்கு, காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஓசூர் ஒருங்கிணைப்பாளர் சுதா நாகராஜன், நதிநீர் பாதுகாப்பு இயக்க தலைவர் டாக்டர் சண்முகவேல், செயலாளர் ஒய்.வி.எஸ்.ரெட்டி, ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஓசூர் நியூ அட்கோ பகுதி மற்றும் ஓசூர் எம்.ஜி. ரோட்டில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மேலும், தனியார் மண்டபத்திலும் காவிரி அன்னைக்கு பூஜைகள் செய்யப்பட்டது. இதில், காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வாசு, நதிநீர் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் சரவணன், சுகுமாரன், நரசிம்மன் மற்றும் விசுவ இந்து பரிஷத் அமைப்பின் வேலூர் மண்டல பொறுப்பாளர் விஷ்ணுகுமார், தேவராஜ், பஜ்ரங்தள் அமைப்பின் நிர்வாகி கிரண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.