வந்தே பாரத் ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு


வந்தே பாரத் ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு
x

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு நேற்று இரவு வந்த, வந்தே பாரத் ரெயிலுக்கு ரெயில்வே அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், மேளதாளங்கள் முழங்க மலர் தூவி வரவேற்றனர்.

சேலம்

சூரமங்கலம்

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு நேற்று இரவு வந்த, வந்தே பாரத் ரெயிலுக்கு ரெயில்வே அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், மேளதாளங்கள் முழங்க மலர் தூவி வரவேற்றனர்.

வந்தே பாரத் ரெயில்

சென்னை-கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் முதல் சேவையை பிரதமர் மோடி சென்னையில் நேற்று மாலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையொட்டி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் காணொலி காட்சி மூலம் நிகழ்ச்சியை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் சேலம் ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம், கோட்ட உதவி வணிக மேலாளர் மாயா பீதாம்பரம், ரெயில் நிலைய மேலாளர் செல்வராஜ் மற்றும் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் பா.ஜனதா சுற்றுச்சூழல் பிரிவு மாநில தலைவர் கோபிநாத், மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் உள்பட பா.ஜனதா நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

சேலம் வந்த ரெயிலுக்கு வரவேற்பு

இதையடுத்து நேற்று இரவு 8.37 மணிக்கு சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் முதலாவது நடைமேடைக்கு வந்தது. அப்போது ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.

தொடர்ந்து சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருள், ரெயிலுக்கு பச்சைக்கொடி காண்பித்து கோவைக்கு உற்சாகமாக வழியனுப்பி வைத்தார். முன்னதாக சேலம் மாநகர் மாவட்ட பா.ஜனதா தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் கட்சியினர் மேளதாளங்கள் முழங்க மலர் தூவி ரெயிலை வரவேற்றனர்.

5 நிமிடம் நின்ற ரெயில்

5 நிமிடம் நின்ற நிலையில் இரவு 8.43 மணிக்கு இந்த ரெயில் கோவைக்கு புறப்பட்டு சென்றது. சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை காண்பதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர்.

இதையொட்டி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பாக மாநகர போலீஸ் உதவி கமிஷனர் லாவண்யா மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள் நிலவழகன், சரவணன் மற்றும் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story