மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி
சிவகாசி
சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டு மையத்தின் சார்பில் முதல் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கல்லூரி செயலாளர் ஏ.பி.செல்வராஜ் தலைமை தாங்கினார். முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினரை பேராசிரியை நளாயினி அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தின ராக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கலியமூர்த்தி கலந்து கொண்டு எண்ணமே வாழ்வு என்ற தலைப்பில் பேசியதாவது, படிக்க வசதி இல் லாத பலர் படிப்பை பள்ளியுடன் நிறுத்தி விடுகிறார்கள். ஆனால் நீங்கள் இந்த பகுதியில் உள்ள சிறந்த கல்லூரியான காளீஸ்வரியில் படிக்க வந்து வந்துள்ளீர்கள். தனக்கு கிடைக்காத கல்வி தனது குழந்தைக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உங்கள் பெற்றோர் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கிறார்கள். உங்கள் வளர்ச்சிக்கு கடைசி வரை பாடுபடும் பெற்றோரை நீங்கள் எந்த நிலையிலும் கைவிடக்கூடாது. தனக்காக சொத்து சேர்க்காத அப்பாவும், தனக்காக சமைக்காத அம்மாவும் இந்தியாவில் அதிகம். கல்வி ஏழைக்களுக்கு செல்வம், செல்வந்தர்களுக்கு அணிகலன், பெண்களுக்கு பாதுகாப்பு. படிக்கின்ற வயதில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் காதலில் நேரத்தை வீணாக்க கூடாது. அது தேவையில்லாத பிரச்சினைகளை கொண்டு வரும். செல்போனை நல்ல செயலுக்கு பயன்படுத்த வேண்டும். தனி அறையில் தனியாக இருக்கும் போது தீய செயலுக்கு பயன்படுத்தினாலும், உலகமே உங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறது என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் அகத்தர மதிப்பீட்டு மையத்தின் ஒருங்கணைப்பாளர் பிரியா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலர் ஏ.பி.செல்வராஜன் புத்தகங்களை வெளியிட, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கலியமூர்த்தி பெற்றுக்கொண்டார்.