ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு வரவேற்பு
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
ஆறுமுகநேரி:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வளாகத்தில் நேற்று செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் தலைமையில் உற்சாக வரவேற்பு ெகாடுக்கப்பட்டது.
ஜோதிக்கு வரவேற்பு
செஸ் ஒலிம்பியாட் ஜோதி நேற்று கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூர் வந்தது. திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஜோதிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ஜோதி தொடர் ஓட்ட தொடக்க விழாவிற்கு மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி வரவேற்றுப் பேசினார். அமைச்சர் ஜோதியை பெற்று கொண்டு தொடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆதித்தனார் கல்லூரி செயலாளர் எஸ்.ஜெயக்குமார், கல்லூரி முதல்வர் மகேந்திரன், தி.மு.க. மாணவர் அணி மாநில துணை அமைப்பாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் நகர சபை தலைவர் சிவசாந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், ஆவின் தலைவர் சுரேஷ்குமார், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், தூத்துக்குடி மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், திருச்செந்தூர் திமுக நகர செயலாளர் வாள் சுடலை, வீரபாண்டியபட்டணம் கிராம பஞ்சாயத்து தலைவர் எல்ல முத்து, நகர சபை ஆணையாளர் வேலவன், திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் கமாலுதீன், நிர்வாக அதிகாரி முருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் பூவானி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியருமான கஜேந்திர பாபு நன்றி கூறினார்.
கலை நிகழ்ச்சிகள்
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காஞ்சி சங்கரா அக்காடமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, ஆறுமுகநேரி பெர்ல்ஸ் பப்ளிக் ஸ்கூல், காயல்பட்டினம் விஸ்டமா பப்ளிக் ஸ்கூல், வீரபாண்டியன் பட்டணம் புனித தாமஸ் மேல் நிலைப்பள்ளி, ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களின் செஸ் பற்றிய பரதநாட்டியம், விழிப்புணர்வு நடனம், மனித சதுரங்கம், செஸ் விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, பாடல், நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.