ஆசிய ஆக்கி சாம்பியன் கோப்பைக்கு வரவேற்பு
மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் விளையாட்டு வீரர்கள் ஆசிய ஆக்கி சாம்பியன் கோப்பைக்கு வரவேற்பு கொடுத்தனர்.
ஆசிய அளவில் ஆண்களுக்கான ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி, சென்னையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்பட உள்ள சாம்பியன் கோப்பை தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பார்வைக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. ஆக்கி போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் மாவட்டந்தோறும் இது எடுத்துச்செல்லப்படுகிறது. இந்த கோப்பையின் சுற்றுப்பயணத்தை சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மதுரை மாவட்டங்களுக்கு சென்று விட்டு தேனிக்கு இந்த கோப்பை நேற்று எடுத்து வரப்பட்டது. மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் விளையாட்டு வீரர்கள் இந்த கோப்பைக்கு வரவேற்பு கொடுத்தனர். பின்னர் இந்த கோப்பையை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், தேனி ஆக்கி சங்க தலைவர் செந்தில், செயலாளர் சங்கிலிகாளை மற்றும் பலர் கலந்துகொண்டனர். மேலும் இதில், பங்கேற்க அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பலர் அழைத்து வரப்பட்டனர். அதே நேரத்தில் அரசு பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்படவில்லை. இதனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு சாம்பியன்ஷிப் கோப்பையை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.