பெரம்பலூருக்கு வந்த சத்துணவு ஊழியர்களுக்கு வரவேற்பு


பெரம்பலூருக்கு வந்த சத்துணவு ஊழியர்களுக்கு வரவேற்பு
x

திருப்பத்தூரில் இருந்து நடை பயணமாக பெரம்பலூருக்கு வந்த சத்துணவு ஊழியர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர்

வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அன்னமிட்ட கைகளை கிண்ணமேந்த விடுவதோ சமூக நீதி என்று தமிழக அரசிடம் நீதி கேட்டு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மாநில மையம் சார்பில், அச்சங்கத்தை சேர்ந்த சத்துணவு ஊழியர்கள் கடந்த 4-ந் தேதி ராமேசுவரம், மயிலாடுதுறை, கும்மிடிப்பூண்டி, கோவை, திருப்பத்தூர், கன்னியாகுமரி, ஒசூர் ஆகிய 7 முனைகளில் இருந்து நடைபயணமாக புறப்பட்டனர். இதில் திருப்பத்தூரில் இருந்து நடைபயணமாக புறப்பட்ட சங்கத்தின் மாநில துணைத் தலைவர் அண்ணாதுரை தலைமையில், சத்துணவு ஊழியர்கள் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி வழியாக பெரம்பலூருக்கு நேற்று வந்தடைந்தனர். அவர்களை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் மணிமேகலை வரவேற்றார்.

நீதி கேட்பது...

பின்னர் அவர்களுடன் பெரம்பலூர் மாவட்ட சங்க நிர்வாகிகள் பாலக்கரையில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை நடைபயணம் மேற்கொண்டனர். மேலும் அவர்கள் தங்களது கோரிக்கைகளை கோஷமிட்டும், கோரிக்கைகள் தொடர்பான துண்டுபிரசுரத்தை பொதுமக்களிடம் வினியோகமும் செய்தனர். மேலும் திருச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் சங்கத்தின் கோரிக்கை மாநாட்டில் பங்கேற்பதற்காகஅவர்கள் நடைபயணமாக திருச்சிக்கு புறப்பட்டு சென்றனர். அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரில் சங்கத்தினரின் ஊர்வலமும், வருகிற ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்து நீதி கேட்பது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக சங்கத்தினர் தெரிவித்தனர்.


Next Story