ரூ.59 லட்சத்தில் நலத்திட்ட உதவி
சிவகங்கை அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 242 பயனாளிகளுக்கு ரூ.59 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
மக்கள் தொடர்பு முகாம்
சிவகங்கையை அடுத்த கிளாதரி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. பி.ஆர்.செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைள் தொடர்பாக கலெக்டரிடம் மனுக்களை வழங்கினர்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது:- பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று, அரசின் நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந்தெடுத்து, அதிலுள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று, மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
நலத்திட்ட உதவி
இந்த முகாமில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து, துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்துள்ளனர். இதனை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, அத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று, தங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 242 பயனாளிகளுக்கு ரூ.59 லட்சத்து 37 ஆயிரத்து 527 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சிவராமன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.