12 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
தர்மபுரியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 12 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
தர்மபுரியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 12 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
குறை தீர்க்கும் நாள் கூட்டம்
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதிய தொகை, வாரிசு சான்றிதழ், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். மொத்தம் 415 கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் தர்மபுரி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், வே. முத்தம்பட்டி வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்லும் இந்த கோவில் அமைந்துள்ள பகுதியில் வரும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பக்தர்கள் நலன் கருதிஇந்த கட்டண தொகையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி இருந்தனர்.
தீர்வு காண உத்தரவு
பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் சாந்தி அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வு காண உத்தரவிட்டார்.இந்த கூட்டத்தில் 10 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் தனிநபர் தொழில் முனைவோர் கடன் உதவி உள்பட மொத்தம் 12 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, உதவி திட்ட அலுவலர் தமிழரசன், மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கண்ணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உள்பட துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.