மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவி
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினர்.
குறை தீர்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கை கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 399 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து 73 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்து 83 ஆயிரத்து 500 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரெத்தினவேல், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலெட்சுமி, ஆதிதிராவிடர் நல அலுவலர் மங்களநாதன் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோரிக்கை மனு
சிவகங்கை மாவட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் தலைவர் சையது உசேன் தலைமையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-
கடந்த 2011-ம் ஆண்டு முதல் தமிழக அரசு சார்பில் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடங்கப்பட்டது. அப்போது அனலாக் முறையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் பின்னர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்திரவின்படி செட்டாப் பாக்ஸ் மூலமாக கேபிள் இணைப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அனலாக் முறை நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த நிலையில் தற்போது அனலாக் முறைக்கு நிலுவை தொகை உள்ளதாக கூறி கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை பணம் கட்ட சொல்லி வற்புறுத்துகின்றனர். மேலும் இதுதொடர்பாக நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது. அனலாக் நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்வதோடு வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்களை திரும்ப கேட்பதையும் நிறுத்த வேண்டும். மேலும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு நல வாரியத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.