மனுநீதி நாள் முகாமில் 151 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
கிளியாப்பட்டில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 151 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.
திருவண்ணாமலை தாலுகா மங்கலம் உள்வட்டத்திற்கு உட்பட்ட கிளியாப்பட்டு, குண்ணுமுறிஞ்சி, வடஆண்டாப்பட்டு, துர்க்கைநம்மியந்தல் ஆகிய கிராமங்களுக்கான மனுநீதிநாள் முகாம் கிளியாப்பட்டு கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் எம்.சாப்ஜான், வட்ட வழங்கல் அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை தாசில்தார் சுரேஷ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு 151 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவு, புதிய குடும்ப அட்டை, வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் என ரூ.10 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வி.பி.அண்ணாமலை, தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமஜெயம், உதவி இயக்குனர் (வேளாண்) எம்.செல்வராஜ், வேளாண் அலுவலர் கே.ஜெயபிரகாஷ், மண்டல துணை தாசில்தார் கலைச்செல்வி, வருவாய் ஆய்வாளர் ஆர்.ஏழுமலை, கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கிளியாப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.