182 பேருக்கு நலத்திட்ட உதவிகள்


182 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 25 May 2023 4:15 AM IST (Updated: 25 May 2023 4:16 AM IST)
t-max-icont-min-icon

கீழ்குந்தாவில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 182 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

நீலகிரி

ஊட்டி

கீழ்குந்தாவில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 182 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

மனுநீதி நாள் முகாம்

குந்தா தாலுகா கீழ்குந்தா கிராமத்தில் தமிழ்நாடு மின்வாரிய விளையாட்டு மைதானத்தில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி, வருவாய்த்துறை சார்பில் 89 பேருக்கு ரூ.70.72 லட்சம் மதிப்பில் நத்தம் பட்டா, 5 பேருக்கு ரூ.1.80 லட்சம் மதிப்பில் சாலை விபத்து நிவாரண உதவித்தொகை, ஒருவருக்கு விதவை சான்று, தோட்டக்கலைத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.97,220 மதிப்பில் நுண்ணீர் பாசன கருவிகள், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் மருத்துவ காப்பீட்டு அட்டைகள், ஊராட்சித்துறை சார்பில் 28 பேருக்கு ரூ.67.20 லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான பணி ஆணை உள்பட மொத்தம் 182 பயனாளிகளுக்கு ரூ.1.86 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் கலெக்டர் அம்ரித் பேசும்போது கூறியதாவது:-

ஊட்டச்சத்து பெட்டகம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்கள் நீலகிரியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல், மருத்துவத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் தேவைப்படும் நபர்களுக்கு வீடுகளுக்கே சென்று மருந்து பெட்டகங்கள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அரங்குகள்

முன்னதாக நடமாடும் மருத்துவ முகாம் மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார்.

முகாமில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, ஆர்.டி.ஓ. துரைசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்ரியா, தோட்டகலைத்துறை துணை இயக்குனர் ஷிபிலா மேரி, சுகாதார துணை இயக்குனர் பாலுசாமி, கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் சத்தியவாணி, செயல் அலுவலர் ரவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story