மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 8 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
நாகர்கோவிலில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 8 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வழங்கினார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 8 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வழங்கினார்.
குறைதீர்க்கும் முகாம்
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக லூயி பிரெயிலி கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 246 பேர் மனுக்கள் அளித்தனர். அந்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் அறிவுரை வழங்கினார்.
பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிகளுக்கு விலையில்லா தையல் எந்திரம், வருவாய்த்துறை சார்பில் கடந்த வாரம் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்த ஒரு பயனாளிக்கு தையல் எந்திரமும் நலத்திட்ட உதவியாக வழங்கினார்.
பரிசு
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் பொது வினியோகத்தின் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் பணிபுரிந்து வரும் பணியாளர்களில் சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்கத்தக்க வகையிலும் பணிபுரிந்து வரும் 3 பேருக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையும், சான்றிதழையும் கலெக்டர் வழங்கினார். அதைத்தொடர்ந்து வருவாய்த்துறையின் சார்பில் கிரையின்ஸ் வலைதளத்தில் வேளாண் குடிமக்களின் விபரங்களை 100 சதவீதம் பதிவேற்றம் செய்த தோவாளை தாலுகா ஆரல்வாய்மொழி தெற்கு கிராம நிர்வாக அதிகாரி கலா, வடக்கு கிராம நிர்வாக அதிகாரி பாத்திமா ஷீபா ஆகியோரை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு சக்கர நாற்காலியை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வழங்கினார். இதுபோல் மொத்தம் 8 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருப்பதி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி சுப்பையா, மாவட்ட வழங்கல் அதிகாரி விமலா ராணி மற்றும் அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.