960 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
வாடிப்பட்டியில் தி.மு.க. அரசின் 2-ம் ஆண்டு சாதனை விழாவையொட்டி 960 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
வாடிப்பட்டியில் தி.மு.க. அரசின் 2-ம் ஆண்டு சாதனை விழாவையொட்டி 960 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி கிருஷ்ணா மகாலில் தி.மு.க அரசின் 2-ம் ஆண்டு சாதனை விழாவையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் சுகிபிரேமலா, பேரூராட்சி உதவி இயக்குனர் சேதுராமன், வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன், கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெங்கடேசன் எம்.எல்.ஏ.வரவேற்றார்.
விழாவில் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு 960 பேருக்கு ரூ.9 கோடியே 57 லட்சத்து 54 ஆயிரத்து 693 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
ரூ.40 கோடியில் கல்வி கடன்
அப்போது அவர் பேசியதாவது:- கடந்த 2 ஆண்டு தி.மு.க.ஆட்சி காலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 1,29,172 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதில் 1,25,833 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்களுக்கு ரூ.40.34 கோடி மதிப்பீடு கல்விக் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. மகளிருக்கான கட்டணமில்லா இலவச பஸ் பயணத்திட்டத்தின் மூலம் ரூ.31.24 கோடி மகளிர் பயனடைந்துள்ளனர்.
கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்ற 36,433 பயனாளிகளுக்கு ரூ.166.43 கோடி மதிப்பிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.8 லட்சத்து 93 ஆயிரத்து 968 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி உதவி ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.358 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 72 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.188 கோடி மதிப்பீட்டில் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
இதில் தாசில்தார் மூர்த்தி, யூனியன் கமிஷனர்கள் ரத்தின கலாவதி, கதிரவன், பேரூராட்சி தலைவர் மு.பால் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பால ராஜேந்திரன், பசும்பொன் மாறன், முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் அயூப்கான், பேரூராட்சி துணை தலைவர் கார்த்திக், முன்னாள் பேரூர் செயலாளர் மு.க. பிரகாஷ், பங்களா சி.மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியினை மக்கள் தொடர்பு அதிகாரி சாலி தளபதி தொகுத்து வழங்கினார்.