ரூ.674 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்


ரூ.674 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
x

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு நாளை வருகை தரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் நாளை மறுநாள் நடைபெறும் விழாவில் ரூ.674 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு நாளை வருகை தரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் நாளை மறுநாள் நடைபெறும் விழாவில் ரூ.674 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

முதல்- அமைச்சர் வருகை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை (வெள்ளிக்கிழமை) திருவண்ணாமலைக்கு வருகை தருகிறார். நாளை காலை கீழ்பென்னாத்தூரில் நடைபெறும் விழாவிலும், மாலையில் திருவண்ணாமலையில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார்.

நாளை மறுநாள் (சனிக்கிழமை) திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் திருக்கோவிலூர் சாலையில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். இதையொட்டி அவர் இன்று காலை சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வருகிறார்.

இல்லம்தேடி கல்வி திட்டம்

அவருக்கு திருவண்ணாமலை மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து அவர் கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆராஞ்சி கிராமத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

தொடர்ந்து மாலையில் திருவண்ணாமலை மாட வீதி பெரியத் தெருவில் உள்ள பழைய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்களுக்கு ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இதையடுத்து திருவண்ணாமலை- வேலூர் செல்லும் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள பேரறிஞர் அண்ணா நுழைவு வாயில், வெண்கலத்தினால் செய்யப்பட்ட கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.

பின்னர் ஈசான்ய மைதானத்தில் நடைபெறும் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து நாளை மறுநாள் காலை 9 மணியளவில் திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

பின்னர் திருவண்ணாமலை -திருக்கோவிலூர் சாலையில் நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சுமார் ரூ.1,103 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்தும், பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பேருரையாற்றுகிறார்.

அதன்படி 1 லட்சத்து 67 ஆயிரம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.674 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும், ரூ.429 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2,600 போலீசார் பாதுகாப்பு

நலத்திட்ட உதவிகள் வழங்கும் பந்தலுக்கு சுமார் 15 ஆயிரம் பயனாளிகள் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 15 ஆயிரம் பயனாளிகள் அமரும் வகையில் மிகவும் பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

விழா முடிந்த பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். முதல்- அமைச்சர் வருகையை முன்னிட்டு அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அனைத்து பணிகளையும் முன்னின்று ஆய்வு செய்து கண்காணித்து வருகிறார்.

அரசு விழாக்கள் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிகளில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாட்கள் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் முதல்-அமைச்சரின் பாதுகாப்பு பணிக்காக சட்டம் -ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் தலைமையில் ஒரு ஐ.ஜி., 3 டி.ஐ.ஜி., 7 போலீஸ் சூப்பிரண்டு உள்பட 2600 போலீசார் திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


Related Tags :
Next Story