உபதேசியார்கள்- பணியாளர்கள் நல வாரியம் அமைப்பு


உபதேசியார்கள்- பணியாளர்கள் நல வாரியம் அமைப்பு
x

கிறிஸ்தவ ஆலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

திருநெல்வேலி

கிறிஸ்தவ ஆலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-

நல வாரியம் அமைப்பு

தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்தவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் ஆகியோரின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக தமிழக அரசின் உத்தரவின் பேரில் உபதேசியார்கள், பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நல வாரியத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உறுப்பினராக சேர்வதற்கான விண்ணப்ப படிவங்களை நெல்லை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நெல்லை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட ரோமன் கத்தோலிக்க திருச்சபை அதன் பேராயர்கள் மற்றும் ஆயர்கள் போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளின் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். திருச்சபைகளின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

கல்வி உதவித்தொகை

இந்த வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும்.

கல்வி உதவித்தொகை, விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை, விபத்தில் ஊனம் ஏற்பட்டால் அதற்கு ஏற்ப உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகைகள் வழங்கப்படும்.

இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் 3-வது தளத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story