நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: மதுரை ரிங்ரோடு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்- காவல்துறை அறிவிப்பு
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுவதால், ரிங்ரோடு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுவதால், ரிங்ரோடு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மதுரை பாண்டிக்கோவில் ரிங்ரோடு கலைஞர் திடலில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடக்கிறது. இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர். இதுபோல், பல்லாயிரக்கணக்கான பயனாளிகள் பல்வேறு ஊர்களிலிருந்து வாகனங்களில் வந்து செல்ல இருக்கின்றனர். அதனை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களுக்கு மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலிருந்து செல்லும் அனைத்து பஸ்களும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சந்திப்பு, பாண்டிகோவில் சந்திப்பு, பி.சி. பெருங்காயம் சந்திப்பு, கருப்பாயூரணி, ஒத்தவீடு, ஆண்டார்கொட்டாரம், சக்கிமங்கலம், சிலைமான் வழியாக விரகனூர் ரவுண்டானா சந்திப்பு சென்று, மண்டேலா நகர் சந்திப்பு வழியாக செல்லவேண்டும்.
இதுபோல், குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு வரும் பஸ்கள் அனைத்தும் விரகனூர் சந்திப்பிலிருந்து மாற்று பாதையாக புதிய தென்கரைசாலை, குருவிக்காரன் சாலை பாலம் சந்திப்பு, அரவிந்த் மருத்துவமனை சந்திப்பு, ஆவின் சந்திப்பு, கே.கே.நகர். ஆர்ச், மார்க்கெட் சந்திப்பு வழியாக மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு செல்லவேண்டும்.
சரக்கு வாகனங்கள்
மேலூர் சாலையிலிருந்து வரும் அனைத்து சரக்கு வாகனங்களும், மேலூர் நான்கு வழிச்சாலை சந்திப்பில் இருந்து பூவந்தி, திருப்புவனம் வழியாக விரகனூர் சந்திப்பினை அடைந்து, சிந்தாமணி ரோடு சந்திப்பு, மண்டேலா நகர் சந்திப்பு வழியாக தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு செல்லவேண்டும். குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து மேலூர் வழியாக திருச்சி மற்றும் சென்னை நோக்கி செல்லக்கூடிய அனைத்து சரக்கு வாகனங்களும் திருமங்கலம், கப்பலூர் சந்திப்பில் இருந்து ரிங்ரோடு வழியாக தேனி ரோடு சந்திப்பு, சமயநல்லூர் சந்திப்பு, வாடிப்பட்டி சந்திப்பு வழியாக திண்டுக்கல், மணப்பாறை வழியாக திருச்சி செல்லவேண்டும்.
கார்-மோட்டார் சைக்கிள்கள்
மதுரை நகரில் பி.சி. பெருங்காயம் சந்திப்பில் இருந்து விழா நடைபெறும் இடமான கலைஞர் திடல் வழியாக விரகனூர் ரவுண்டானா சந்திப்பிற்கு செல்லக்கூடிய பொதுமக்களின் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது. இந்த வாகனங்கள், பி.சி. பெருங்காயம் சந்திப்பில் இருந்து கருப்பாயூரணி, ஒத்த வீடு, ஆண்டார் கொட்டாரம், சக்கிமங்கலம், சிலைமான் வழியாக விரகனூர் ரவுண்டானா செல்லவேண்டும்.
அதுபோல் விரகனூர் ரவுண்டான சந்திப்பிலிருந்து பி.சி. பெருங்காயம் செல்லக்கூடிய அனைத்து பொதுமக்களின் வாகன போக்குவரத்து விரகனூர் ரவுண்டானா சந்திப்பு, புதிய தென்கரை சாலை வழியாக, பி.டி.ஆர். சிக்னல் சந்திப்பு, அண்ணாநகர், மேலமடை சந்திப்பு சென்று அங்கிருந்து வலதுபுறம் திரும்பி பி.சி. பெருங்காயம் சந்திப்பிற்கு செல்ல வேண்டும். இது தவிர, மேலூர் செல்பவர்கள் மேலமடை சந்திப்பிலிருந்து லேக் வியூ ரோடு வழியாக மார்க்கெட் ரோடு, மாட்டுத்தாவணி பஸ் நிலையம், மீனாட்சி மிஷன் மருத்துவமனை சந்திப்பு ஒத்தக்கடை வழியாக மேலூர் சாலை, நான்கு வழிச் சாலை சந்திப்பு சென்று மேலூர் நோக்கி செல்லவேண்டும்.
பயனாளிகளின் வாகனங்கள்
கள்ளிக்குடி, சேடபட்டி, கல்லுப்பட்டி, திருமங்கலத்திலிருந்து வரக்கூடிய வாகனங்கள் கப்பலூர் பாலத்திலிருந்து வலதுபுறம் திரும்பி மண்டேலாநகர் ரிங்ரோடு வழியாக விழா நடைபெறும் இடத்திற்கு செல்லவேண்டும். செல்லம்பட்டி, உசிலம்பட்டியிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் நாகமலைபுதுக்கோட்டை ரிங்ரோட்டின் வலதுபுறம் திரும்பி திருமங்கலம், கப்பலூர் பாலத்திலிருந்து இடதுபுறம் திரும்பி மண்டேலாநகர் ரிங்ரோடு வழியாக விழா நடைபெறும் இடத்திற்கு செல்லவேண்டும். கொட்டாம்பட்டி, மேலூரிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் ஒத்தக்கடை ரிங்ரோடு பி.சி. பெருங்காயம் சந்திப்பு வழியாக விழா நடைபெறும் இடத்திற்கு செல்லவேண்டும்.
வாடிப்பட்டியிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் தனிச்சியம், அலங்காநல்லூர், ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், சர்வேயர்காலனி சந்திப்பு, 120 அடி ரோடு சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி மீனாட்சி மிஷன் மருத்துவமனை சந்திப்பு, பாண்டிகோவில் ரிங்ரோடு வழியாக விழா நடைபெறும் இடத்திற்கு செல்லவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.