கீழடியில் சுடுமண் உறைகிணறு கண்டுபிடிப்பு


கீழடியில் சுடுமண் உறைகிணறு கண்டுபிடிப்பு
x

கீழடியில் சுடுமண் உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த கீழடியில் பல்வேறு கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது. தற்போது எட்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கீழடி மட்டுமின்றி அருகே உள்ள கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கீழடியில் ஏற்கனவே ஏழு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் மேற் கொண்டதில் கண்ணாடி பாசிமணிகள், கண்ணாடி வளையல்கள், சுடுமண்மணிகள், சங்கு வளையல்கள், உள்பட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பிறகு எட்டாவது குழி தோண்டி அகழாய்வு பணி நடைபெற்றது. இதில் கடந்த வாரம் 2 அடி உயரத்திற்கு செங்கல் கட்டுமான சுவர் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது. சுவரின் மேல் செங்கல்கள் ஒன்றின் மேல் ஒன்றாக வரிசையாக அடுக்கி வைத்து நேர்த்தியாக கட்டியுள்ளனர். இதன் மூலம் பழங்கால தமிழர்கள் கட்டிடப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது தெரிய வருகிறது. குழியின் ஓரப்பகுதியில் இந்த சுவர் தென்பட்டதால் அருகில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணி செய்யும் போது இதன் நீளம், ஆழம் தெரியவரும் எனவும் கூறப்பட்டது. அதன் பிறகு 9-வது குழி அளவு செய்து தோண்டப்பட்டு வருகிறது. இதற்கிடையே 8-வது குழியில் செங்கல் சுவர் கிடைத்த இடத்தின் அருகே நேற்று ஆழமாக தோண்டி அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து செய்த போது சுடுமண் உறைகிணறு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் செய்யும்போது சுடுமண் உறைகளின் அளவுகள் எத்தனை என்பது தெரியவரும் எனவும் கூறப்படுகிறது.


Next Story