159 பேருக்கு ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினர்
திருவாரூரில் 159 பேருக்கு ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
திருவாரூரில் 159 பேருக்கு ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
ஆய்வு கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரியசாமி, டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, எம்.எல்.ஏ.க்கள் பூண்டி. கலைவாணன், மாரிமுத்து, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப்யாதவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி வாரியத்தலைவர் மதிவாணன், மாவட்ட ஊராட்சித்தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், 'திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை சுற்றியுள்ள சாலையினை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை விரைவில் நிவர்த்தி செய்யப்படும்' என்றார்.
ஜவுளி பூங்கா
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், 'மன்னார்குடி அருகே மேலநாகை கிராமத்தில் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் ஜவுளி பூங்கா தொடங்கப்படும்' என்றார். தொடர்ந்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழகஅரசின் 2 ஆண்டு சாதனை விளக்க கையேடு வெளியிடப்பட்டது.
இதையடுத்து பல்வேறு துறைகள் சார்பில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 15 பேருக்கு விலையில்லா தையல் எந்திரம், 10 பேருக்கு சலவை பெட்டி, ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 12 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிக்கான ஆணை உள்பட மொத்தம் 159 பேருக்கு ரூ.1 கோடியே 83 லட்சத்து 4 ஆயிரத்து 886 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சந்திரசேகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்திரா, வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா, கீர்த்தனாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.