வெலிங்டன் நீர்த்தேக்க பாசன வாய்க்கால்களை தூர்வாரிய பிறகே தண்ணீரை திறக்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்


வெலிங்டன் நீர்த்தேக்க  பாசன வாய்க்கால்களை தூர்வாரிய பிறகே தண்ணீரை திறக்க வேண்டும்  ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

வெலிங்டன் நீர் தேக்க பாசன வாய்க்கால்களை தூர்வாரிய பிறகே தண்ணீரை திறக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

ராமநத்தம்,

திட்டக்குடி அருகே வெலிங்டன் நீர்த்தேக்கம் உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் கிடைக்கும் நீரை பயன்படுத்தி சுற்றியுள்ள 64 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதன் மூலம் சுமார் 24 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்நிலையில் சேலம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக 29 அடி கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்தில் தற்போது 27 அடி தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், பாசன சங்க உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது டிசம்பர் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதவி செயற் பொறியாளர் தனசேகரன், உதவி பொறியாளர்கள் சுதர்சன், பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாயிகள் போராட்டம்

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால் கடை கோடியில் உள்ள விளைநிலங்களுக்கு நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் தண்ணீர் சென்றடைவதில்லை. பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரிய பின்பு நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் எனக்கோரி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், போராட்டமும் நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதைத்தொடர்ந்து விவசாயிகளும், தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story