கியாஸ் சிலிண்டர் வினியோக தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன?
நீலகிரி மாவட்டத்தில் கியாஸ் சிலிண்டர் வினியோக தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன? என்பது குறித்து தொழிலாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் கியாஸ் சிலிண்டர் வினியோக தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன? என்பது குறித்து தொழிலாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
சமையல் கியாஸ் சிலிண்டர்
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை வசதியானவர்கள் வீட்டில் மட்டும் சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்பாடு இருந்தது. அப்போது பலர் விறகு அடுப்பு, மண்எண்ணெய் அடுப்புகளை பயன்படுத்தி வந்தனர். தற்போது பலர் சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் மூலம் கியாஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டதால், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களும் சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
இதனால் தமிழகத்தில் 85 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகளில் கியாஸ் சிலிண்டர் பயன்பாடு உள்ளது. இதனால் தினமும் லட்சக்கணக்கான சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. வீடுகள் மட்டுமின்றி ஓட்டல்கள் போன்றவற்றுக்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சிலிண்டர்கள் வினியோகம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் அன்றாட பணியின்போது எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து காணலாம்.
வினியோகிப்பதில் தாமதம்
ஊட்டியை சேர்ந்த சிலிண்டர் வினியோக தொழிலாளி பாலசுப்பிரமணி:-
தமிழகத்தில் சமவெளி பகுதிகளில் சிலிண்டர் வினியோகம் செய்வது போல், நீலகிரி மாவட்டத்தில் வினியோகம் செய்ய முடியாது. இங்கு மேடான மற்றும் செங்குத்தான வளைவுகள் மிகுந்த பகுதிகள் அதிகம். இதனால் கூடுதல் உடல் உழைப்ைப செலுத்த வேண்டி உள்ளது. பெரும்பாலான மாதங்களில் எப்பொழுதும் மழை பெய்வதால், அந்த நேரங்களில் சிலிண்டர் வினியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. ஆனால், அதை பொதுமக்கள் புரிந்துகொள்ளாமல் சிலர் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
அதே சமயத்தில் ஓட்டலில் டிப்ஸ் கொடுப்பதை போல், பொதுமக்கள் விருப்பப்பட்டு கூடுதலாக பணம் கொடுத்தால் அதை மட்டும் வாங்கிக் கொள்வோம். கட்டாயமாக பணம் கொடுக்க வேண்டும் என்று யாரையும் வற்புறுத்துவது கிடையாது. பிற தொழிலில் 45 அல்லது 50 வயதுக்கு மேல் சீனியாரிட்டி அடிப்படையில் வேலை பளு குறைந்து உத்தரவு போடும் வேலை கிடைக்கும். ஆனால், சிலிண்டர் வினியோக பணியில் வயதானாலும் நாங்கள் தான் சிலிண்டர் சுமந்து செல்ல வேண்டும்.
போக்குவரத்து நெரிசல்
ஊட்டியை சேர்ந்த தொழிலாளி சபரீஷ்:-
நீலகிரி மாவட்டம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், வாகனங்களை சாலை ஓரம் நிறுத்திவிட்டு சென்று சிலிண்டர் வினியோகம் செய்ய முடியாது. உடனடியாக வாகனத்தை எடுக்க சொல்லி போலீசார் எச்சரிக்கை செய்வார்கள். குறுகலான பாதைகளாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு வேக வேகமாக சிலிண்டர் வினியோகம் செய்ய வேண்டும். சிலிண்டர் வினியோகம் செய்யும் தேதியில் சிலர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் அல்லது நிகழ்ச்சிக்கு சென்று விடுவார்கள்.
அவர்களை செல்போனில் தொடர்பு கொண்டால் மீண்டும் மற்றொரு நாள் கொண்டு வர சொல்வார்கள். சிலர் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி விடுவார்கள். ஆனால், ஆன்லைனில் செலுத்திய தொகை சில நேரங்களில் அப்டேட் ஆகாததால் குளறுபடி ஏற்படும். இதற்கிடையே சில வீடுகளில் ஒரு சிலிண்டர் மட்டும் வைத்திருப்பார்கள். அவர்கள் சிலிண்டர் புக் செய்துவிட்டு, நாங்கள் வீட்டுக்கு செல்லும்போது சிலிண்டர் தீரவில்லை. எனவே, அடுத்த வாரம் வருமாறு கூறுவார்கள். மேலும் கியாஸ் கசிவு ஏற்பட்டால், அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபடுகிறோம். இதனால் அன்றைய நாளில் பிற பணியில் கவனம் செலுத்த முடியாது.
போதுமான சம்பளம் இல்லை
கோத்தகிரியை சேர்ந்த வெங்கடேஷ்:-
சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளர்களுக்கு மலைப்பகுதிகளில் வீடுகளுக்கு சென்று வினியோகிப்பதில் சிரமங்கள் உள்ளது. சம்வெளி பகுதிகளில் குடியிருப்போர் ஒரே இடத்தில் காலி சிலிண்டர்களை கொண்டு வந்து வைத்து, அங்கிருந்து புதிய சிலிண்டர்களை வாங்கி செல்வார்கள். ஆனால், நீலகிரியில் வாகனங்கள் செல்ல முடியாத செங்குத்தான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு சிலிண்டரை சுமந்து சென்று வீடுகள்தோறும் வினியோகித்து வருகின்றனர்.
அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் இதுபோன்ற பகுதிகளுக்கு வினியோகம் செய்ய போதுமானதாக இல்லை. எனவே, சில குடியிருப்புவாசிகள் அவர்களது சிரமத்தை உணர்ந்து தங்களது சொந்த விருப்பத்துடன் அவர்களுக்கு கூடுதலாக கூலி வழங்கி வருகின்றனர்.
உடல் அசதி
கூடலூர் சிலிண்டர் வினியோக தொழிலாளி ராஜமூர்த்தி:-
15 ஆண்டுகளுக்கும் மேலாக சிலிண்டர் வினியோகம் செய்து வருகிறேன். கொரோனா காலத்தில் இடைவிடாமல் மக்களுக்கு சேவை ஆற்றிய திருப்தி உண்டு. மலைப்பிரதேசம் என்பதால் மேடு பள்ளங்கள் ஏறி மக்களை தேடி சென்று சிலிண்டர் வழங்குவதால் உடல் அசதி ஏற்படும். சம்பளம் உள்ளிட்ட பண பலன்கள் முறையாக வழங்கப்படுகிறது. எந்த பிரச்சினையும் இல்லை. கூடலூர் பகுதியில் 6 மாதங்கள் தொடர் கனமழை காலத்தில் சிலிண்டர்களை பல்வேறு சிரமங்களுக்கு இடையே வினியோகிக்கப்பட்டு வருகிறது.