ஜெயராஜ்-பென்னிக்சை தாக்கியபோது போலீஸ் நிலையத்தில் நடந்தது என்ன? சாத்தான்குளம் வழக்கில் வெளியான தகவல்கள்


ஜெயராஜ்-பென்னிக்சை தாக்கியபோது போலீஸ் நிலையத்தில் நடந்தது என்ன? சாத்தான்குளம் வழக்கில் வெளியான தகவல்கள்
x

ரத்தக்கறை படிந்த ஆடைகள் குப்பை தொட்டிக்கு சென்றது எப்படி? ஜெயராஜ்-பென்னிக்சை தாக்கியபோது போலீஸ் நிலையத்தில் நடந்தது என்ன? என்பது குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கொல்லப்பட்ட வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இந்த வழக்கில் 2027 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதன்பேரில் சாட்சிகள் ஆஜராகி தங்களின் சாட்சியங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணைக்கு உதவியாக சுமார் 400 பக்கங்களுடன் கூடுதல் குற்றப்பத்திரிகையை கடந்த வெள்ளிக்கிழமையன்று கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது.

அதில் இடம் பெற்றிருந்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள், 19.6.2020 அன்று மாலை, காமராஜர் பஜாரில் இருந்து ஜெயராஜையும், பென்னிக்சையும் சட்டவிரோதமாக அழைத்துச் சென்று, அவர்கள் இருவரையும் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்துள்ளனர். கடுமையான காயங்களை ஏற்படுத்தி உள்ளனர். அதன்பின் தந்தை-மகன் இருவர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்தனர்.

ஆடைகள் குப்பைத்தொட்டியில் வீச்சு

ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களில் இருந்து ரத்தம் பீறிட்டு, போலீஸ் நிலையத்தின் சுவர்கள், தரை, அங்கிருந்த பொருட்களில் தெறித்து உள்ளது. ரத்தக்கறையை சுத்தப்படுத்துமாறு படுகாயங்களால் அவதிப்பட்ட பென்னிக்சை போலீசார் கட்டாயப்படுத்தி உள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள், ஜெயராஜ்-பென்னிக்சுக்கு எதிரான சதித்திட்டத்தை தீட்டி இருந்ததும் உறுதியாகியுள்ளது.

அதன்படிதான் அவர்களை சம்பவத்தின்போது, மாஜிஸ்திரேட்டு முன்பாக ஆஜர்படுத்துவதற்கு முன்பாக, அவர்கள் உடுத்தியிருந்த ஆடைகளில் ரத்தக்கறை இருக்கக்கூடாது என்று கருதி, உடைகளை மாற்றி உள்ளனர்.

பின்னர் ரத்தக்கறை படிந்த உடைகளை போலீசார் குப்பைத் தொட்டியில் வீசி உள்ளனர். சாத்தான்குளம் போலீஸ் நிலைய சுவர்கள், லத்திகளில் ரத்தக்கறை படிந்து இருந்தது தடயவியல் ஆய்வு முடிவில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இந்த வழக்கில் கைதானவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கின் முழு விசாரணை தகவல்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால், வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, விரைவில் தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story