கன்னியாகுமரி அருகே கடலில் குளித்த போது ராட்சத அலை இழுத்துச் சென்ற மாணவரின் கதி என்ன?; தேடும் பணி தீவிரம்


கன்னியாகுமரி அருகே கடலில் குளித்த போது ராட்சத அலை இழுத்துச் சென்ற மாணவரின் கதி என்ன?; தேடும் பணி தீவிரம்
x

கன்னியாகுமரி அருகே கடலில் குளித்த போது மாணவரை ராட்சத அலை இழுத்துச் சென்றது. அவரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே கடலில் குளித்த போது மாணவரை ராட்சத அலை இழுத்துச் சென்றது. அவரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.

இந்த பரபரப்பு சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:-

கல்லூரி மாணவர்

திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் திபின் (வயது 23). இவர் மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இந்தநிலையில் திபினுக்கு செமஸ்டர் தேர்வு முடிவடைந்தது.

இதனால் அவர் சுற்றுலா செல்வதற்காக தன்னுடைய உறவினர்களை குமரிக்கு அழைத்திருந்தார். அதன்படி நேற்று உறவினர்களுடன் கன்னியாகுமரிக்கு சென்றார்.

அங்கு பல இடங்களை உற்சாகமாக ரசித்த அவர்கள் மாலையில் கோவளம் கடலில் குளித்தனர்.

ராட்சத அலை இழுத்துச் சென்றது

அப்போது திடீரென ராட்சத அலை கடற்கரை நோக்கி வந்தது. இதில் திபின் சிக்கி கொண்டார். வந்த வேகத்தில் திபினை சுருட்டிக் கொண்டு அலை உள்ளே இழுத்துச் சென்றது. உடனே திபினை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அவருடன் குளித்தவர்கள் சத்தம் போட்டனர். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

பின்னர் இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் கடலில் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் வெகுநேரமாகியும் அவரை மீட்க முடியவில்லை.

இதனால் ராட்சத அலை இழுத்துச் சென்ற மாணவர் திபினின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அங்கு தொடர்ந்து தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story