தென்பெண்ணையாற்றில் குளித்த 2 வாலிபர்களின் கதி என்ன


தென்பெண்ணையாற்றில் குளித்த 2 வாலிபர்களின் கதி என்ன
x
தினத்தந்தி 18 Sept 2022 12:15 AM IST (Updated: 18 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் தாலுகா பேரங்கியூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் நரசிம்மன் மகன் சதீஷ்(வயது 30), பேரங்கியூர் மேற்கு தெருவை சேர்ந்த பிரகாசம் மகன் பரத் என்கிற செந்தில்(30). நண்பர்களான இவர்கள் இருவரும் தங்கள் நண்பர்களுடன் நேற்று மாலை 6 மணியளவில் விழுப்புரம் அருகே பிடாகத்தில் ஓடும் தென்பெண்ணையாற்றுக்கு குளிக்க சென்றனர். அப்போது சதீஷ், பரத் இருவரும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துக்கொண்டிருந்தபோது அவர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் நீரில் மூழ்கி மாயமான சதீஷ், பரத் ஆகிய இருவரையும் கிராம மக்கள், இளைஞர்கள் உதவியுடன் தேடினர். சில மணி நேரம் தேடிப்பார்த்தும் இருவரும் கிடைக்கவில்லை. இரவு நேரம் என்பதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. ஆற்றில் குளித்த 2 வாலிபர்கள் என்ன ஆனார்கள், அவர்களின் கதி என்ன? என்பது தெரியாமல் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story