விழுப்புரத்தில் அரசு கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
விழுப்புரத்தில் அரசு கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் காகுப்பம் சாலை நாவலர் நெடுந்தெருவை சேர்ந்தவர் ராஜசேகர், இவர் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் ஜோதி (வயது 21). இவர் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ. வரலாறு முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவரது தாய் விஜயா, தஞ்சாவூரில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றார். ராஜசேகர் புதுச்சேரிக்கு வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜோதி, தன் மீது மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இவருடைய அலறல் சத்தம்கேட்டதும் அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் விரைந்து ஓடிவந்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு ஜோதி, உடல் முழுவதும் தீயில் கருகி உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள், ஜோதியின் பெற்றோருக்கும் மற்றும் விழுப்புரம் நகர போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணவி ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜோதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மாணவி ஜோதி, உடலில் பற்றி எரிந்த தீயுடன் வீட்டிற்குள் அங்கும், இங்கும் ஓடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.