கோவில் சொத்துகள் சுரண்டப்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? - அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி


கோவில் சொத்துகள் சுரண்டப்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? - அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x

கோவில் சொத்துகள் சுரண்டப்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?என அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

மதுரை


நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பாபநாசம் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நெல்லை மாவட்டத்தில் உள்ள நடுகண்ட விநாயகர் கோவில், வாழஉகந்த அம்மன் கோவில், உச்சினிமாகாளி அம்மன் கோவில், சங்கிலி பூதத்தார் கோவில் ஆகியவற்றின் தீவிர பக்தன் நான். இந்த கோவில்களின் திருப்பணி கமிட்டியினர் கோவிலுக்கு சொந்தமான லட்சக்கணக்கான ரூபாயை மோசடி செய்து உள்ளனர். இது தணிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுசம்பந்தமாக விசாரித்து, உரிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மேற்கண்ட கோவில்களின் தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உரிய நபர்கள் தப்பிக்கும் வகையில்தான் அதிகாரிகள் செயல்பாடு இருந்துள்ளது. இந்த வழக்கு 2014-ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை அதில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வரவில்லை. மேலும் அறநிலைத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த அறிக்கை ஏற்புடையதாக இல்லை. இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கையை அறநிலையத்துறை கமிஷனர் எடுத்து உள்ளார்? தணிக்கை அறிக்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன.? கோவில் சொத்துகள் சுரண்டப்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? என்பது தொடர்பான அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, விசாரணை ஜூன் மாதம் 2-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Next Story