குன்னூர் பஸ் நிலைய விரிவாக்கம் எப்போது?


குன்னூர் பஸ் நிலைய விரிவாக்கம் எப்போது?
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் பஸ் நிலைய விரிவாக்கம் எப்போது? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நீலகிரி

மலை முகடுகளை மோதி செல்லும் மேகக்கூட்டம், வளைந்து, நெளிந்து செல்லும் மலைப்பாதை, பச்சை பசேல் என காட்சி அளிக்கும் வனப்பகுதிகள், தேயிலை தோட்டங்கள் என இயற்கை அழகுகளை தன்னகத்தே நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் பகுதி கொண்டு உள்ளது.

இங்கு சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. ஊட்டிக்கு அடுத்த படியாக குன்னூர் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு மத்திய அரசின் பாஸ்டியர் ஆய்வகம் மற்றும் வெடிமருந்து தொழிற்சாலைகள் உள்ளது. குன்னூர் வெலிங்டனில் எம்.ஆர்.சி. ராணுவ முகாம் உள்ளது. குன்னூரில் முக்கிய தொழிலாக தேயிலை, மலைகாய்கறி விவசாயம் இருக்கிறது. இதன் சுற்றுவட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

போதுமான இடமில்லை

குன்னூர் நகராட்சியில் 70 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சுற்றுலா தலம் என்பதால், அங்கு வசிப்பவர்களை விட தினமும் வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகம். தோட்ட, கூலி தொழிலாளர்கள், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் வாகனங்களை நிறுத்த கூட போதுமான இடம் இல்லை. மேலும் பஸ் நிலையம் மிகவும் குறுகலாக இடவசதி இல்லாமல் உள்ளது. இதனால் அரசு பஸ்களை திருப்ப முடியாத நிலை காணப்படுகிறது. அங்கு எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இதனால் மக்கள் தொகைக்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்கை மற்றும் குன்னூர் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் உள்ளதால், பயணிகள் கடும் அவதி அடைகின்றனர். சாலையோரத்தில் பஸ்கள் நிறுத்தப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

பஸ்கள் திரும்புவதில் சிரமம்

குன்னூர் வியாபாரி ரஹீம்:-

பஸ் நிலையம் இடவசதியுடன் இருக்க வேண்டும் என்றால், ஊருக்கு வெளியில் தனியாக, தேவையான வசதியுடன் இருக்க வேண்டும். ஆனால், குன்னூர் நகராட்சியில் கோத்தகிரி-குன்னூர் சாலையையொட்டி தான் பஸ் நிலையம் உள்ளது. ஊட்டியில் இருந்து கோவை உள்பட வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் குன்னூர் பஸ் நிலையத்திற்குள் செல்வது இல்லை. இதனால் பயணிகள் குன்னூர்-ஊட்டி சாலையில் மேட்டுப்பாளையம், கோவை செல்வதற்காக காத்து கிடக்கின்றனர். மேலும் ரெயில் தண்டவாளம் இருப்பதால், அதற்கு முன்னதாக பயணிகளை இறக்கி விட்டு பஸ்கள் நேராக மேட்டுப்பாளையம் சென்று விடுகின்றன. இதனால் பயணிகள் சிரமம் அடைகிறார்கள்.

குன்னூர் ஐயூப்:-

அவசர தேவைக்கு பஸ் நிலையத்தில் வந்து பயணிகள் காத்திருக்கக்கூட இருக்கைகள் கிடையாது. அங்கு மழை பெய்தால் ஒதுங்கி நிற்பதற்கு கூட போதுமான இடவசதி இல்லை. மேலும் அங்கு வரும் பஸ்கள் திரும்ப முடியாமல், ஒன்றுடன் ஒன்று உரசியபடி நிறுத்தப்படுகிறது. இதற்கு மத்தியில் குன்னூர் நகரில் 20-க்கும் மேற்பட்ட தனியார் மினி பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்கிறது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் குன்னூரில் பஸ் நிலையம் இவ்வாறு இருப்பது சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. குன்னூர் நகர பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய கோரி பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுவரை அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

தீயணைப்பு நிலையம் இடமாற்றம்

வக்கீல் அற்புதமணி:-

குன்னூர் பஸ் நிலையத்தின் வலது புறம் 2 நீரோடைகள் சந்திக்கும் இடத்தில் பெரிய பாலம் உள்ளது. பாலத்தின் அருகில் ரெயில்வே தண்டவாளமும், தண்டவாளத்தின் அருகில் தேசிய நெடுஞ்சாலையும் உள்ளது. இதேபோல் மற்றொருபுறம் தீயணைப்பு நிலையம் உள்ளது. இவ்வாறு இருப்பதால் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டுமானால் தீயணைப்பு நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும். ஆனால், மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் அவ்வப்போது ஏற்படும் தீ விபத்துகளை அணைக்க தீயணைப்பு நிலையம் இந்த இடத்தில் இருந்தால் தான் சரியாக இருக்கும். இதனால் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வாய்ப்புகள் இல்லை. ஆனால், பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்து புதியதாக மேம்படுத்த வாய்ப்பு உள்ளதா என திட்டமிட வேண்டும்.

நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகி மனோகரன்:-

ஆங்கிலேயர் காலத்தில் கடைகளுக்காக அமைக்கப்பட்ட இடம் தான் தற்போது உள்ள பஸ் நிலையம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடைகளை காலி செய்ய கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி 5 கடைகள் காலி செய்யப்பட்டது. ஆனால், மற்ற கடைகள் காலி செய்யப்படவில்லை. இதுகுறித்து கேட்டால் அவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளார்கள் என்று நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

நகராட்சி அந்தஸ்தில் உள்ள குன்னூர் பஸ் நிலையத்தில் இலவச கழிப்பறை கிடையாது. இருக்கைகளும் இல்லை. எனவே, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் பஸ் நிலையத்தில் காத்திருந்து அவதிப்படுகின்றனர். எனவே, பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். மேலும் குன்னூர் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்வதை விட சாமன்னா பூங்காவில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க ஆய்வு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கலாம்.

மேம்பாலம்

சுற்றுலா பயணி நவீன் சார்லஸ்:-

நான் மருந்து விற்பனை நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். இதனால் கோவையில் இருந்து அடிக்கடி குன்னூர், ஊட்டி உள்ளிட்ட இடங்களுக்கு வந்து செல்வேன். வேலைகள் அனைத்தையும் முடித்த பின்னர் நேரமிருந்தால், அருகில் இருக்கும் சுற்றுலா தலத்திற்கு செல்ல முயற்சி செய்கிறேன். ஆனால், கோவையில் இருந்து ஊட்டி செல்லும் பஸ்சில் வந்து குன்னூரில் இறங்கி, உள்ளூர் பஸ்சை பிடிக்க பஸ் நிலையம் வருவது பெரும்பாடாக உள்ளது.

ஏனென்றால் பஸ் நிலையம் அருகே ரெயில்வே லெவல் கிராசிங் உள்ளதால், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, இங்கு மேம்பாலம் கட்டினால் நன்றாக இருக்கும். இதன் மூலம் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளுக்கும் பயனுள்ளதாக அமையும்.

(பாக்ஸ்)

விரிவாக்கம் செய்ய திட்டம்

இது குறித்து குன்னூர் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

குன்னூர் பஸ் நிலையத்தை ஒட்டி உள்ள தீயணைப்பு நிலையம் நகராட்சி இடத்தில் உள்ளது. எனவே, தீயணைப்பு நிலையத்தை இடம் மாற்றி பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் சுற்றுலாத்துறை அமைச்சர் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் விரைவில் பஸ் நிலைய விரிவாக்க பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story