கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
கோடை விடுமுறைக்குப்பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? என்பது குறித்த தகவல் பள்ளிக்கல்வித்துறையின் கல்வியாண்டு நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கல்வியாண்டு நாட்காட்டி
1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 2022-23-ம் கல்வியாண்டு வகுப்புகள் நேற்றுடன் நிறைவு பெற்றுவிட்டன. அவர்களுக்கு இன்று (சனிக்கிழமை) முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் ஜூன் மாதத்தில் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும்? என்ற எதிர்பார்ப்பு மாணவ-மாணவிகள், பெற்றோர் மத்தியில் இருந்து வந்தது. அதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை கல்வியாண்டு நாட்காட்டியை நேற்று வெளியிட்டு இருக்கிறது.
பள்ளிகள் திறப்பு
அதன்படி, ஜூன் மாதம் 1-ந்தேதி (வியாழக்கிழமை) 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து 5-ந்தேதி (திங்கட்கிழமை) 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் ஆரம்பிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர், செப்டம்பர் மாதம் 14-ந்தேதியில் இருந்து 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீடு மற்றும் காலாண்டுத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது என்றும், தேர்வு முடிவு அதே மாதம் 27-ந்தேதி வெளியிடப்படும் என்றும், காலாண்டுத்தேர்வு முடிந்து, விடுமுறைக்குப்பிறகு, அக்டோபர் 3-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பொதுத்தேர்வு எப்போது?
அதனைத்தொடர்ந்து டிசம்பர் மாதம் 11-ந்தேதியில் இருந்து 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு தொகுத்தறி மதிப்பீடு, 2-ம் பருவத்தேர்வு, அரையாண்டுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற உள்ளதாகவும், அரையாண்டு விடுமுறைக்குப்பிறகு மீண்டும் 2024-ம் ஆண்டு ஜனவரி 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, மார்ச் மாதம் 18-ந்தேதி பிளஸ்-2 வகுப்புக்கும், 19-ந்தேதி பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு தொடங்குகிறது. அவர்களைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் 8-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு பொதுத்தேர்வு நடக்க இருக்கிறது. மற்ற மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீடு மற்றும் 3-ம் பருவத்தேர்வு, ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் மாதம் 18-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த வேலைநாட்கள்
அந்த வகையில் 2023-24-ம் கல்வியாண்டின் இறுதி வேலை நாளாக, அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் 30-ந் தேதி என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி, வரும் கல்வியாண்டில் மொத்த வேலை நாட்கள் 217 ஆகும். கடந்த கல்வியாண்டில் 216 நாட்கள் மொத்த வேலை நாட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.