பாம்பன் ரெயில் பாலத்தில் போக்குவரத்து தொடங்குவது எப்போது? - பராமரிப்பு பணிகள் தீவிரம்


பாம்பன் ரெயில் பாலத்தில்  போக்குவரத்து தொடங்குவது எப்போது? - பராமரிப்பு பணிகள் தீவிரம்
x

பராமரிப்பு பணி காரணமாக பாம்பன் ரெயில் பாலத்தில் போக்குவரத்து தொடங்குவது எப்போது? என பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

மதுரை


பராமரிப்பு பணி காரணமாக பாம்பன் ரெயில் பாலத்தில் போக்குவரத்து தொடங்குவது எப்போது? என பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

பாம்பன் ரெயில் பாதை

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட மதுரை-ராமேசுவரம் ரெயில் பாதையில் மண்டபத்தில் இருந்து மன்னார்வளைகுடாவில் உள்ள ராமேசுவரம் தீவை ரெயில் மூலம் இணைப்பதற்கு பாம்பன் பாலம் கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தின் போது கட்டப்பட்டது. முற்றிலும் இரும்பு பொருளால் ஆன பாலம் என்பதால் நூற்றாண்டை கடந்தும் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இருப்பினும், உப்புத்தன்மையுடன் கூடிய கடல்காற்று, சுற்றுச்சூழல், புயல் உள்ளிட்ட இயற்கை காரணங்கள் ஆகியவற்றால் பாலம் வலுவிழந்து காணப்படுகிறது. இதற்காக சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் பாலத்தின் அதிர்வுகளை கண்டறியும் கருவியை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். இந்த கருவியில், கடந்த 22-ந் தேதி அளவுக்கதிகமான அதிர்வுகள் பதிவானதால் 23-ந் தேதி முதல் பாம்பன் ரெயில்பாதையில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. இந்த தடை வருகிற 10-ந் தேதி வரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூக்குப்பாலம்

பாம்பன் பாலத்தை பொறுத்தமட்டில் இயற்கை காரணங்கள் தவிர, அதிகமான ரெயில் போக்குவரத்தும் பாலத்தின் உறுதித்தன்மைக்கு அச்சுறுத்தல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாலம் மீட்டர் கேஜ் ரெயில் இயக்கத்துக்கு ஏற்ப 1914-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. வடிவமைத்த ரெயில்வே என்ஜினீயர் ஸ்கெர்சர் பெயர் சூட்டப்பட்டது. அவரது தொழில்நுட்பத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மூலம் 2,058 மீட்டர் நீளத்துக்கு 146 இரும்பு கர்டர்களை கொண்டு கடல் நீர் மட்டத்தில் இருந்து 3 மீட்டர் உயரத்தில் தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

அதிக உயரம் கொண்ட படகுகள் அந்த பாதையை கடக்கும் போது பாலத்தின் நடுப்பகுதி 2-ஆக பிரிந்து விடும். அப்போது, அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 2 ரெயில்கள் மட்டும் அந்த பாலத்தை கடந்து சென்றது. பின்னர், அகலப்பாதையாக மாற்றம் செய்யப்பட்ட பின்னர் நாள் ஒன்றுக்கு 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டன. தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை, வடமாநிலத்தவர்களின் வருகை ஆகியன காரணமாக ரெயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பஸ் வசதி

மதுரை-ராமேசுவரம் இடையேயான பாசஞ்சர் ரெயில் சேவைக்காக மட்டும் 6 ரெயில்கள் அந்த பாலத்தை தினமும் கடந்து செல்கின்றன. இதனால் அதிர்வுகள் மற்றும் உப்புகாற்றை தாங்க இயலாத பாலம் அடிக்கடி பழுதடைந்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்கு ஏற்றதாக இல்லை. இதற்காக ரெயில்வே என்ஜினீயர்கள் குழு 24 மணி நேரமும் பாலத்தை கண்காணித்து வருகிறது. இருப்பினும் பாலம் 108 ஆண்டுகளை கடந்து விட்டதால், உறுதித்தன்மை குறைந்துள்ளது. இதனால் வருகிற 31-ந் தேதி வரை அந்த பாதையில் ரெயில்கள் இயக்க சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.

தற்போது ராமநாதபுரத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்கனவே ராமேசுவரம் வரை முன்பதிவு செய்த பயணிகளுக்கு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ரெயில்வே வாரியத்தின் தொழில்நுட்ப அறிவுரை மற்றும் ஆலோசனை குழுவான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவின் (ஆர்.டி.எஸ்.ஓ.) நேரடி மேற்பார்வையில் பாலத்தின் பழுதுகள் சரிசெய்யப்பட்டு, பாதுகாப்பாக ரெயில்கள் இயக்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

புதிய பால பணிகள்

இதற்கிடையே, ரெயில்வே துணை நிறுவனமான ஆர்.வி.என்.எல். எலெக்ட்ரோ மெக்கானிக்கல் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பாம்பன் பால கட்டுமான பணிகளில் 84 சதவீதம் முடிந்துள்ளது. புதிய பாலம் நவீன தொழில்நுட்பத்தில், கடலின் நடுவே லிப்டு போல செயல்படும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. அத்துடன், மின் ரெயில் பாதை மற்றும் இரட்டை அகலப்பாதைக்கு ஏற்ற வகையில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் வருகிற மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், வருகிற செப்டம்பர் மாதம் தான் புதிய பாலப்பணிகள் முடிவடையும் என்று தெரிகிறது.


Next Story