பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் திறக்கப்படுவது எப்போது


பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் திறக்கப்படுவது எப்போது
x

ஆர்எஸ்புரத்தில் 42 கோடியில் கட்டப்பட்ட பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் எப்போது திறக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

கோவை

ஆர்.எஸ்.புரத்தில் ரூ.42 கோடியில் கட்டப்பட்ட பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் எப்போது திறக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

அதிகரித்து வரும் வாகனங்கள்

கோவை மாநகரில் 20 லட்சம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இன்றி சாலையில் நிறுத்தும் நிலை உள்ளது.

இதை தடுக்கும் வகையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம், பெரியகடை வீதி உள்ளிட்ட இடங்களில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது.

ரூ.42 கோடியில் கட்டும் பணி

அதன் முதற்கட்டமாக கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் 4 அடுக்கு வாகன நிறுத்துமிடம் ரூ.42 கோடி செலவில் கட்டும் பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது.

அந்த பணி தற்போது நிறைவடைந்து விட்டது. ஆனால் பயன்பாட்டிற்காக இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. எனவே பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் பயன்படும் வகையில் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆர்.எஸ்.புரத்தில் ரூ.42 கோடி செலவில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டு உள்ளது. இங்கு 400 இலகு ரக வாகனங்களை நிறுத்த இடவசதி உள்ளது. நவீன ஹைட்ராலிக்ஸ் எந்திரங்கள் உள்ளன.

திறக்கப்படும்

இந்த கட்டிடத்திற்குள் கார்கள் வரும் சென்சார் கருவி பதிவு செய்யும். எவ்வளவு நேரம் கார்கள் நிறுத்தி வைக்கப்படுகிறதோ? அதற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும். ஹைட்ராலிக்ஸ் மூலம் கார்கள் மேல் தளங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் உள்ளூர் திட்ட குழுமம் அனுமதி அளிக்காமல் உள்ளது. அனுமதி கிடைத்தும் பொதுமக் கள் பயன்பாட்டிற்கு பலஅடுக்கு வாகன நிறுத்துமிடம் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இடப்பற்றாக்குறை உள்ளதால் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அவசியம். உரிய அனுமதி பெற்று பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என்றனர்.


Next Story