ஜவ்வாதுமலை கோடை விழா நடைபெறுவது எப்போது?


ஜவ்வாதுமலை கோடை விழா நடைபெறுவது எப்போது?
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாதுமலை கோடை விழா எப்போது நடைபெறும் என்று பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாதுமலை கோடை விழா எப்போது நடைபெறும் என்று பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

ஜவ்வாதுமலை கோடை விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன. அந்த வரிசையில் மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தளமாக ஜவ்வாது மலை திகழ்கிறது.

ஜவ்வாதுமலை கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாகும். இந்த மலையில் பழங்கால சின்னங்கள் பல உள்ளன. சோழர்காலத்தில் கட்டப்பட்ட கோவிலூர் சிவன் கோவில் முக்கியமான ஒன்றாகும்.

இந்த மலையின் மேல் பீமன் நீர்வீழ்ச்சி உள்ளது. சீசன் சமயங்களில் இந்த நீர் வீழ்ச்சியில் தண்ணீர் விழும் அழகு காண்போரை பரவசப்படுத்தும்.

இங்குள்ள மக்கள் திணை, சாமை, வரகு போன்ற சிறுதானியங்கள் பயிரிடுகின்றனர். தேன், மிளகு, பழ வகைகள் இங்குள்ள மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமாக திகழ்கின்றன.

ஜவ்வாதுமலையில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் அல்லது ஜூலை மாதம் தொடக்கத்தில் கோடை விழா நடைபெறுவது வழக்கம்.

அப்போது பல்வேறு அரசு துறைகள் சார்பில் கண்காட்சிகள், விளையாட்டு போட்டிகள், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், படகு சவாரி, சாகச நிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மேலும் ஜவ்வாது மலையில் உள்ள மலை வாழ்மக்களின் விளைச்சல் பொருட்களான பலாப்பழம், கொய்யா உள்ளிட்ட பழங்களையும், சிறுதானியங்கள் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு

அதுமட்டுமின்றி கோடை விழா இங்குள்ள மலை வாழ் மக்களின் பாரம்பரிய பழக்க வழக்கம் வெளி மக்களுக்கு அறிந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பாக இருக்கும்.

இவ்விழாவில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கலந்து கொள்வார்கள்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோடை விழா நடைபெறவில்லை.

இந்த நிலையில் கடந்த மாதத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் கோடை விழா நடத்துவது தொடர்பாக அரசு அலுவலர்களுடனான பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது.

ஜூன் மாதம் இறுதியில் கோடை விழா நடத்த திட்டமிடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை கோடை விழா நடைபெறும் தேதி அறிவிக்கப்பட வில்லை.

இதுகுறித்து சில அதிகாரிகளிடம் கேட்ட போது திருவண்ணாமலைக்கு தமிழக முதல்-அமைச்சர் வந்து சென்ற பிறகு கோடை விழா நடைபெறும் என்று தெரிக்கின்றனர்.

ஜவ்வாதுமலை கோடை விழா எப்போது நடைபெறும் என்று பொதுமக்கள் மிகவும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஜவ்வாது மலை கோடை விழா நடைபெறுவதற்கான தேதியை விரைவில் அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story