போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு எப்போது?
ஏழாயிரம்பண்ணையில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தாயில்பட்டி,
ஏழாயிரம்பண்ணையில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை சாத்தூரில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மக்கள், மாணவர்கள் வெளியூர் செல்வதற்கு இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆதலால் இந்த சாலை வழியாக தினமும் எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரும் சிரமப்படுகின்றனர்.
ஆக்கிரமிப்பு
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
ஏழாயிரம்பண்ணை வழியாக தினமும் எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த மாதம் சாத்தூர் நெடுஞ்சாலை துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படாததாலும், தொடர்ந்து கண் காணிக்கப்படாததாலும் வாகன நெரிசலினால் சில மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதேபோல சாலையின் இருபுறங்களிலும் ஆங்காங்கே இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு செல்கின்றனர். எனவே சாலை ஓரங்களில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கவும், போக்குவரத்து சிக்னல்கள் அமைத்து போக்குவரத்து நெரிசலை நிரந்தரமாக சரி செய்யும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.