"திராவிடம் வந்ததும் சனாதனம் காலாவதியாகிவிட்டது" - அமைச்சர் பொன்முடி
திராவிடம் வந்ததும் சனாதனம் காலாவதியாகிவிட்டது என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.
சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில், வரும் கல்வி ஆண்டிற்கான பொறியியல் படிப்பு கலந்தாய்விற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-
ஆளுநர் ஆர்.என்.ரவி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல. மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்படுபவர். ஆளுநராக இருப்பவர் அரசியல் பேசுவதென்பது தவறான ஒன்று. மாநில அரசுடன் ஒத்து செயல்படுவது தான் ஆளுநரின் கடமை. ஒன்றிய அரசின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்படக் கூடாது.
திராவிட மாடல் காலாவதியாகவில்லை. திராவிடம் வந்ததும் சனாதனம் காலாவதியாகிவிட்டது. இனிமேல் காலாவதியாக போவது ஆளுநர் தான். திராவிடம் அகில இந்திய அளவில் பரவத் தொடங்கி இருக்கிறது. திராவிடம் என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே பெருமையான கொள்கை.
சென்னை பல்கலைக் கழகத்தின் தரம் 10வது இடத்தில் இருந்து 100வது இடத்திற்கு சென்றதாக ஆளுநர் கூறியது தவறு. தமிழகத்தில் கல்வித்தரம் நன்றாக இருக்கிறது என ஏற்கனவே ஆளுநர் பேசியிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.