கோவில்பட்டியில் பழைய வீட்டை புதுப்பிக்கும் போது 2 தீர்வை வசூலிப்பதாக கவுன்சிலர்கள் புகார்


கோவில்பட்டியில் பழைய வீட்டை புதுப்பிக்கும் போது   2 தீர்வை வசூலிப்பதாக கவுன்சிலர்கள் புகார்
x

கோவில்பட்டியில் பழைய வீட்டை புதுப்பிக்கும் போது 2 தீர்வை வசூலிப்பதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகராட்சி பகுதியில் பழைய வீட்டை புதுப்பிக்கும் போது 2 தீர்வை வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவித்தனர்.

நகராட்சி கூட்டம்

கோவில்பட்டி நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்்கு நகராட்சி தலைவர் கா.கருணாநிதி தலைமை தாங்கினார். ஆணையாளர் ஓ.ராஜாராம், துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் ரமேஷ், சுகாதார அலுவலர் நாராயணன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும், துணை தலைவர் பேசுகையில், நகர்மன்ற கூட்டத்தின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட வேண்டும் என்றார். அதற்கு பதிலளித்த தலைவர், அடுத்து வரும் கூட்டங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும் என்றார்.

2 தீர்வை வசூல்

பின்னர் உறுப்பினர்கள் பேசுகையில், நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழைய வீட்டை புதுப்பித்து, அதற்கு வீட்டு தீர்வை செலுத்தி வருகின்றனர். ஆனால், தற்போது பழைய வீட்டுக்கு சேர்த்து தீர்வை வசூலிக்கப்படுகிறது. இது சரியா?. ஒரு வீட்டுக்கு இரண்டு தீர்வை வசூலிப்பதை தவிர்க்க வேண்டும்.

புதிதாக அமைக்கப்படும் சாலை யோரங்களில் கட்டப்படும் வாறுகால், சாலையை விட உயரம் குறைவாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீரோடு அடித்து வரப்படும் மணல் வாறுகாலில் தேக்கமடையும் சூழல் உள்ளது. எனவே, வாறுகாலின் உயரத்தை அதிகரித்து, சாலையில் ஆங்காங்கே குழாய் பதித்து, அதன் வழியாக மழைநீர் வாறுகாலில் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

கவுன்சிலர் வெளிநடப்பு

அப்போது, 32-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் எம்.ஆர்.வி.கவியரசன், தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான பணிகள் எதுவும் தீர்மானங்களில் இல்லையென கூறி வெளிநடப்பு செய்தார்.

தொடர்ந்து, அவையில் வைக்கப்பட்ட 100 தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


Next Story