ரூ.11½ கோடியில் கட்டப்பட்ட ஸ்டெம் பூங்கா விரைவில் திறக்கப்படுமா?
தஞ்சை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.11½ கோடியில் கட்டப்பட்ட ஸ்டெம் பூங்கா திறப்பு விழாவுக்காக காத்துக் கொண்டிருப்பதால், எப்போது திறக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தஞ்சாவூர்;
தஞ்சை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.11½ கோடியில் கட்டப்பட்ட ஸ்டெம் பூங்கா திறப்பு விழாவுக்காக காத்துக் கொண்டிருப்பதால், எப்போது திறக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்டெம் பூங்கா
சென்னை, திருச்சி, கோவை, வேலூர் மாநகரங்களில் உள்ள கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் மையத்துக்கு இணையாக தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள அருளானந்தநகரில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்டெம் பூங்கா அமைக்கும் பணி ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஏறக்குறைய 2.50 ஏக்கர் பரப்பளவில் ரூ.11½ கோடி மதிப்பில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றுடன் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.இங்குள்ள கோளரங்கத்தில் டிஜிட்டல் புரொஜெக்டர் சாதனத்தின் மூலம் குழந்தைகளுக்கான அறிவியல் திரைப்படங்கள், ஆவணப்படங்கள் உள்ளிட்டவை ஒளிபரப்பப்பட உள்ளன. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் நட்சத்திரக் கூட்டம், கோள்கள் போன்றவற்றை மிக அருகில் நேரில் பார்ப்பது போன்று இருக்கும்.
ஏவுகணை
மேலும், 100 கருத்தாக்கங்களுடன் கூடிய அறிவியல் சாதனங்கள் இடம்பெற்றுள்ளன. பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது அறிவியல் பாடங்களை விளையாட்டு மூலம் கற்கும் விதமாக இந்த சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அறிவியலில் அடிப்படையான விஷயங்களை கற்பதற்கு இந்த சாதனங்கள் பயனுள்ளதாக இருக்கும்.இதேபோல, கணித பாடங்களை வேடிக்கையாகவும், சுவாரஸ்யமாகவும் கற்கும் விதமான எண் கணித சாதனங்களும் அமைக்கப்பட்டுள்ளன. விண்வெளிக்கு அனுப்பப்படும் ஏவுகணைகளான ஜி.எஸ்.எல்.வி. 33 அடி உயரத்திலும், பி.எஸ்.எல்.வி. 25 அடி உயரத்திலும் மாதிரி வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை மாதிரியாக இருந்தாலும், உண்மையான ஏவுகணை போன்று காணப்படுகின்றன.குழந்தைகள் தங்களது பாடங்களை விளையாட்டுடன் கற்பதற்காக ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பரிணாம வளர்ச்சியை உணர்த்தும் விதமாக 16 வடிவங்களில் டைனோசர் பொம்மைகள் மிக உயரமான வடிவில் நிறுவப்பட்டுள்ளன. மேலும், யானை, ஆமை, சிங்கம் உள்ளிட்ட வகை விலங்குகளின் பொம்மைகளும் நிஜமாகவே நேரில் பார்க்கும் விதமாக இடம்பெற்றுள்ளன.
திறப்பு விழா
தஞ்சை மாவட்ட மாணவர்கள் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள மாவட்டங்களைச் சார்ந்தவர்களும் கல்வி சுற்றுலாவாக வந்து செல்வதற்கு வாய்ப்பாக இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா அமைக்கும் பணி முதலில் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், காலம் கடந்ததால், டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதுவும் கடந்து மார்ச் மாத இறுதியில் தான் பணிகள் முடிக்கப்பட்டன. என்றாலும், பணிகள் முடித்து 2 மாதங்களாக திறப்பு விழாவுக்காக இந்த பூங்கா காத்திருக்கிறது.இந்தப் பூங்காவை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், தமிழக முதல்-அமைச்சர் தஞ்சைக்கு அடுத்து வர வாய்ப்புள்ளதால், அப்போது நேரில் வந்து திறந்து வைக்க வாய்ப்புள்ளது என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
சுற்றுலா பயணிகள்
முதன்மைச் சுற்றுலா தலமாக மாறி வரும் தஞ்சை மாநகருக்கு இப்போது உள்ளூர் மட்டுமல்லாமல், வெளியூர் மக்களின் வருகையும் அதிகரித்துள்ளது. எனவே, பெரியகோவில், அரண்மனை வளாகம், தஞ்சை அருங்காட்சியகம், ராஜப்பா பூங்கா, மணிமண்டபம் போன்றவற்றின் வரிசையில் இந்த ஸ்டெம் பூங்காவும் இடம்பெற உள்ளது. தற்போது விடுமுறை நாட்களில் தஞ்சைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. எனவே, இந்த பூங்காவை விரைவில் திறக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.