ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார் அறை கீழ்தளம் இடிந்ததில் கிணற்றில் மூழ்கி 2 தொழிலாளர்கள் பலி
ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார் அறை கீழ்தளம் இடிந்ததில் கிணற்றில் மூழ்கி 2 தொழிலாளர்கள் பலியாகினர்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே மின்மோட்டாரை பழுது நீக்க சென்றபோது, அந்த மோட்டார் அறையின் கீழ்தளம் இடிந்து கிணற்றில் விழுந்ததில் 2 தொழிலாளர்கள் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
தோட்ட தொழிலாளர்கள்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கானம் கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சிலோன்காலனி ஆரைக்குளம் செல்லும் மங்கம்மாள் சாலையில் அமைந்துள்ளது.
இந்த தோட்டத்தில் வடக்கு ஆரைக்குளத்தை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 45), கவர்னகிரியை சேர்ந்த மாரிமுத்து (50), சிந்தலக்கட்டை கிராமத்தை சேர்ந்த மரியதாஸ் (75) உள்பட பலர் வேலை செய்து வந்தனர்.
கிணற்றில் விழுந்தனர்
நேற்று காலையில் தோட்டத்தில் உள்ள கிணற்றின் மின்மோட்டார் பழுதாகி விட்டது. அதை பழுது பார்ப்பதற்காக ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குலசேகரநல்லூர் கிராமத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் அரியநாயகம் (60) வரவழைக்கப்பட்டார். 11 மணி அளவில் அவர் கிணற்றை ஒட்டிய மோட்டார் அறையின் கீழ்தளத்தில் உள்ள மின் மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அவருக்கு துணையாக தொழிலாளர்கள் ஈஸ்வரன், மரியதாஸ், மாரிமுத்து ஆகியோரும் அங்கு சென்றனர். அப்போது திடீரென்று மோட்டார் அறையின் கீழ்தளம் இடிந்து கிணற்றில் விழுந்தது. இதனால் அங்கிருந்த 4 பேரும் கிணற்றுக்குள் விழுந்தனர். அவர்கள் மீது கட்டிட இடிபாடுகளும் விழுந்ததால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.
மீட்புப்பணி
இதை பார்த்த அந்த பகுதியில் இருந்த சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் சுப்பையா தலைைமயில் வீரர்கள் கயிறு மூலம் கிணற்றில் இறங்கினர். அங்கு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த மாரிமுத்து, அரியநாயகம் ஆகியோரை மீட்டு மேல ெகாண்டு வந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2 பேர் பலி
தொடர்ந்து மற்ற 2 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மேற்கொண்டனர். இதில் மரியதாஸ் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. மேலும் 120 அடி ஆழமுள்ள கிணற்றில் 40 அடிக்கு தண்ணீர் இருந்ததால் மற்றொரு தொழிலாளியான ஈஸ்வரனை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து தூத்துக்குடியில் இருந்து முத்துக்குளிக்கும் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கிணற்றில் இறங்கி ஈஸ்வரனை தேடினார்கள். மாலை 5 மணி அளவில் அதாவது சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் அவரது உடலை மீட்டனர்.
தொடர்ந்து போலீசார், 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.
மேலும் சம்பவ இடத்திற்கு மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் முத்துராமன் ஆகியோர் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
குடும்பத்தினர் கதறல்
இந்த சம்பவத்தில் இறந்த ஈஸ்வரனுக்கு ஜெயராணி என்ற மனைவியும், அருண்குமார் என்ற மகனும், அனுசுயா, கல்பனா ஆகிய மகள்களும் உள்ளனர். பலியான ஈஸ்வரன், மரியதாஸ் உடல்களை பார்த்து குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
இறந்த 2 பேரின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.