வழிப்பறி திருடன் தாக்கியதில்மொபட்டில் சென்ற பெண் படுகாயம்


தினத்தந்தி 8 April 2023 12:15 AM IST (Updated: 8 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே வழிப்பறி திருடன் தாக்கியதில் மொபட்டில் சென்ற பெண் படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே வழிப்பறி திருடன் தாக்கியதில் மொபட்டில் இருந்து கீழே விழுந்த பெண் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்றோரை பார்க்க...

சாத்தான்குளம் அருகேயுள்ள கடாட்சபுரத்தை சேர்ந்தவர் ஜெயகுமார் (வயது 39). தொழிலாளி. இவரது மனைவி ஜெயா (34). இவரது பெற்றோர் திசையன்விளை அருகேயுள்ள இட்டமொழி துவரம்பாடில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பெற்றோரை பார்ப்பதற்காக ஜெயா, வீட்டிலிருந்து மொபட்டில் புறப்பட்டு ெசன்றார். சாத்தான்குளம் அருகே பண்டாரபுரம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்பகுதியிலுள்ள மலைச்சாமி கோவில் அருகில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் மர்மநபர் ஒருவர் வேகமாக பின்தொடர்ந்து வந்துள்ளார்.

பெண் மீது தாக்குதல்

திடீரென்று மொபட் அருகில் மோட்டார் சைக்கிளுடன் வந்த அந்த மர்மநபர் ஜெயா கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றுள்ளார். சுதாரித்து கொண்ட ஜெயா நகை பறிக்க விடாமல் ஜெயா தடுக்க முயற்சித்ததால் ஆத்திரமடைந்த மர்மநபர், ஜெயாவை தாக்கி மொபட்டுடன் சாலையில் தள்ளிவிட்டுள்ளார். இதில் சாலையில் விழுந்த படுகாயம் அடைந்த ஜெயா போட்ட சப்தம்கேட்டு, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்துள்ளனர். இதை பார்த்தவுடன் மர்ம நபர் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தி தப்பி சென்று விட்டார். பலத்த காயங்களுடன் இருந்த ஜெயாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வழிப்பறி திருடனுக்கு வலைவீச்சு

இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ஜெயாவை தாக்கிய வழிப்பறி திருடனை தேடிவருகின்றனர். மேலும் போலீசார் விசாரணையில், ஜெயா அணிந்திருந்த நகை கவரிங் எனவும் தெரிய வந்தது.


Next Story